சோதனை என்ற பெயரில் அட்டூழியமா?

நீட் தேர்வின்போது சோதனை என்ற பெயரில் மாணவர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து எழுந்த புகாரின்பேரில் சிபிஎஸ்இக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இத்தேர்வு நேற்று நடந்தது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11,800 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு மதுரையில் ஜெயின் வித்யாலயா, மகாத்மா பள்ளிகள், மதுரை கல்லூரி, வக்போர்டு கல்லூரி, யாதவா கல்லூரி, மன்னர் கல்லூரி உட்பட 20 மையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும், 20 பேர் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும் செயல்பட்டனர். 6 பறக்கும் படையினரும் தேர்வை கண்காணித்தனர்.
நாடு முழுவதும் நடந்த இந்த ‘நீட் தேர்வு’ பல்வேறு  போராட்டத்திற்கும், சிக்கல்களுக்கும் இடையில் ஒருவழியாக நடந்து முடிந்தது. அது தொடர்பாக சிபிஎஸ்இக்கு எதிராக அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன.நீட் தேர்வின்போது மாணவர்கள் பல நிறங்களில் டிசைன் போட்ட ஆடைகள் அணிந்து வரக் கூடாது. தலையில் அணிந்திருந்த ஹேர்பின்கள், ஹேர்பேண்டுகளையும் கழற்றக் கூறினர். இதுமட்டுமல்லாமல், கம்மல், துப்பட்டாவுக்கும் அனுமதியில்லை. கடிகாரம், சாமி கயிறுகள், பூணூல், மணி மாலைக்கும் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவுக்கும் அனுமதியில்லை. கூந்தல் பின்னலுக்கு அனுமதியில்லை.
இதனால் மாணவிகள் தலைவிரி கோலமாகச் சென்றனர். மேலும், ஜலதோஷம் உள்ளவர்கள் கைக்குட்டை கொண்டு செல்லக் கூடாது என்றும் தாங்கள் அணிந்து இருக்கும் துணியிலேயே துடைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினர். கைக்குட்டைக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், மாணவர்களின் காதுகளுக்குள் டார்ச் அடித்துப் பார்ப்பது, மீசைக்குள் டார்ச் அடிப்பது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. இதனால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் எனப் பெற்றோர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
நீட் தேர்வின்போது பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மாணவர்களை அவமானப்படுத்தியது மற்றும் துன்புறுத்தியது என்ற புகார்களும் எழுந்தன. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் சிபிஎஸ்இக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில், நீட் தேர்வின்போது சோதனை என்ற பெயரில் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரில் தமிழகத் தலைமைச் செயலாளர் மற்றும் சிபிஎஸ்இ ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்காகத் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று முன்தினம நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் சிபிஎஸ்இ விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
சோதனை என்ற முறையில் ஓரிரு மையத்தில் அதிகாரிகள் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். உயரமான காலணி அணிந்து செல்லவும், மாணவியர் சடை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டது. கழிப்பறைக்கு சென்றாலும் ஒருவர் கூடவே வருகிறார். இது போன்ற நடவடிக்கை எரிச்சலை ஏற்படுத்தியது.
Powered by Blogger.