நந்திக்கடலோரம் ஒளி ஏந்தி அஞ்சலிப்போம்..!.

முள்ளிவாய்க்கால் முடிவிடத்தில்
கொள்ளியிட வசதியில்லை
அள்ளியணைத்து உறவுகள் கூடி
கடைசி அஞ்சலி  செலுத்த வழியில்லை.
ஒப்பாரி பாடி உறவுகளுக்கு
இறுதிபாட வழியில்லை.
செத்தவரைப் புதைக்கக் கூட
சொந்தபந்தம் அயலில் இல்லை.


யார் பெற்ற பிள்ளைகளோ....?
யார் யாரின் சொந்தங்களோ...?
யார் யாரைப் பார்க்க எண்ணி
பார்த்திருந்த விழியினரோ?
இறக்கும் நொடிப் பொழுதில்
யார் யாரை அழைத்தனரோ?
யார் மடியில் கண்மூட
கடைசி நொடி நினைத்தனரோ?


வெட்ட வெளியிலே செத்துச் செத்துக் கிடந்தர் ஐயோ......!
இரத்தமும் தசைகளும்
அவியலிட்ட படையலாய்
கொட்டிச் சிதறி குவிந்து கிடந்ததையோ...!
முளி பிதுங்கி அகோரமாயும்
தலையிழந்து முண்டமாயும்
சதசதத்த தெருவெளியாய்
சிதறிக் கிடந்தது உடலங்கள்......


குண்டுச் சத்தங்களும்
குடலைப் பிழிந்த பட்டினியும்
தாங்க முடியா வெம்மை....
விகாரிப்பு மனங்களோடு
அங்கம் அங்கமாய்
உருகி உருகி  உயிர் மடிந்தவர் பூமியது.

நிம்மதி இழந்து தவித்தோம்.
நிலமிழந்த மனிதரானோம்.
கடைசி மரியாதையை
காலங்கடந்து செய்வதற்கும்
தகுதியற்ற மனிதர்களின்
தலையீடுகள் தொல்லையானதுவே.


சுயநல சிம்மாசனக் கனவுகளுக்கு
எம்மவரின் சிந்திய குருதிப்புனல்
அபிசேகப் பாலாமோ?
பிழைப்புவாதம் புரிவதற்கு
தொடு பொருள் இவர்தானோ?


அவலமாய் இறக்கும் போது
அவலமாய் கண்ணீர் வடிக்கும் போது
வாய் மூடி மௌனம் காத்த
வெள்ளைக் கொக்குகள்
மீன்களுக்கு குடைபிடிக்க
வரிசைகட்டி நிற்குதுகள்.
மீன்களுக்குத் தெரியும்
வெள்ளை எல்லாம்
சமாதானக் குறியீடல்ல.

நிலமிழந்த மனிதருக்கு  அஞ்சலிக்க
நிலம் தமதென கொக்கரிக்கும்
ஆங்கார மமதையுடைத்து
நந்திக் கடல் ஓரத்தில்
ஒரு பொதுத் தீபம் ஏற்றிடலாம்.
எழுந்திடுவீர் மமதை உடைத்திடுவீர்.

நந்திக் கடல் கற்று சுழன்றடித்து
இறந்தவர் முகங்களை எழுந்தருளச் செய்யட்டும்.
நந்திக் கடலே இனி எங்களின்
முதுகெலும்பாய் முடிவிடமாய்
காலங்காலமாய் இறந்தோரின்
ஒளியேந்தும் வழிபடு நிலமாகட்டும்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Powered by Blogger.