மெல்பேணில் நினைவுகூரப்பட்ட தமிழர் இனவழிப்பு நினைவுநாள்!

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில்
உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. மே மாதம் 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது.


சென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக
உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியை ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியை ஞானகுணாளன் ஹரிதாஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரை திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.


தொடர்ந்து நிகழ்வின் தலைமையுரையை திரு. ரகு அவர்கள் நிகழ்த்தினார். தமிழர் இனவழிப்பு நினைவுநாளின் முக்கியத்துவம், ஈழத்தமிழரின் இன்றைய நிலை, தாயகத்தின்
இன்றைய நிலை என்பவற்றை வெளிப்படுத்திய அவரது பேச்சு, தமிழர்களின் அரசியற் பங்களிப்பின் தேவையையும் தொடர்ந்தும் நீதிவேண்டிய போராட்டத்தில் அனைவரினதும் ஒத்துழைப்பைக் கோரியும் இருந்தது.அடுத்துப் பேசவந்த ஐரோப்பிய நாட்டுச் செயற்பாட்டாளர் செந்தூரன் அவர்கள், மாவீரரின் தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றையும் போராட்டத்தின் நியாயத்தன்மை என்பவற்றையும் விரிவாக விளக்கி, முள்ளிவாய்க்காலோடு போராட்டம் முடிந்துவிடவில்லை, அது புதுவடிவில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்ற செய்தியோடு, தமிழர்கள் ஒற்றுமையாக தொடர்ந்தும் எமக்கான பரப்புரைப்போரை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.


அதைத்தொடர்ந்து நடனாலயா பள்ளி மாணவி ருக்சிகா அவர்களின் வணக்க நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஒன்றியத் தலைவர் திருமதி லீலாவதி அவர்களின் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் செய்தி காணொலியாக இடம்பெற்றது.


தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தினரோடும் பல்வேறு வழிகளிலும் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்காகவும் ஏதிலிகளுக்காகவும்
போராடிக்கொண்டிருக்கும் Red Flag பத்திரிகையின் ஆசிரியர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் Ben Hillier அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார். கடந்த நவம்பர் மாதம் தமிழர் தாகயத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தில் கண்டவைகள்,
மாவீரர்மேலும் விடுதலைப் புலிகள் மீதும் தாயகத்து மக்கள் கொண்டிருக்கின்ற அபிமானம், அங்குள்ள மக்கள் இப்போதும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் தவித்துக்கொண்டிருக்கும் நிலைமை என்பவற்றைப் பேசினார்.
அடக்குமுறைகள் தொடர்ந்துகொண்டிருக்கும்வரை விடுதலைப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு ஈழமும் பலஸ்தீனமும் தற்கால எடுத்துக்காட்டுக்கள் என்பதை முன்வைத்ததோடு,
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை மேற்குநாடுகள் கையாளும்முறை தொடர்பாகவும், உண்மையான புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களே என்பதை வலியுறுத்தினார். 

Powered by Blogger.