நீதிபதி இளஞ்செழியனுக்கு திருகோணமலையில் அமோக வரவேற்பு!

கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோசத்துடன் நீதிபதி மா. இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று வரவேற்கப்பட்டார்.

 யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

 இதையடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.  ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வருடாந்த இடமாற்றத்தின் கீ்ழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில், நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

 அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டார்.

 யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் இருந்த காலப்பகுதியில் பல வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளுக்குச் சரியான தண்டனையும் வழங்கியிருந்தார்.

 இதனால் வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் நீதிபதி இளஞ்செழியனின் புகழ் கொடிகட்டிப் பறந்தது.  இந்த நிலையில் தற்போது திருகோணமலையில் தனது பணிகளைத் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.