நிவாரண செயற்திட்டங்களை வழங்க நடவடிக்கை!

அதிக மழையுடனான வானிலையுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரண செயற்திட்டங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

 அதிக மழை வீழ்ச்சியினால் அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி நேற்று சிலாபத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

 அனர்த்த நிலைமைகளின்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை போன்றே அனர்த்தத்தின் பின்னரான காலத்தில் மக்களின் நலன்புரி தேவைகளை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த விடயத்தில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  இடம்பெயர்ந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கு இதன்போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

 அத்துடன், விபத்துக்குள்ளான மக்களை மீட்கும் பணிகளில் முப்படையினரது ஒத்துழைப்புடன் முறையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 இதனிடையே, 20 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மழையுடன் கூடிய வானிலை காரணமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 இதுவரையில், 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 ஆயிரத்து 553 பேர்  265 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே இன்று முதல் கடும் மழை குறைவடையலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Powered by Blogger.