யாழில் கலாச்சாரம் சீர்குலைக்கப்பட்டு தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது!

இந்த நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற
கடுமையான யுத்தத்தின் விளைவாக இப் பகுதிகளில் வாழ்ந்துவந்த பூர்வீகக் குடிகளின் அமைதியான வாழ்க்கை முறைகள் முழுமையாக சீர்குலைக்கப்பட்டு தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். அறம் செய் அமைப்பினால் கிளிநொச்சி- பல்ல வராயன்கட்டு பிரதேசத்தில் வறிய மாணவ ர்கள் 100பேருக்கு துவிச்சக்கர வண்டி வழ ங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்ற து. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே மு தலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது முதலமைச்சர் மேலும் கூறுகையில்,

அவர்களின் ஜீவனோபாய வழிமுறைகள் அத்தனையும் அழிக்கப்பட்டு வீடு வாசல்கள் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் குடிசை வீடுகளில் தொழில் முயற்சிகள் இன்றி, உறவுகளை இழந்து அல்லலுற்றுக் கொண்டிருக்கின்ற இம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவிற்காவது உயர்த்துவதற்காக நாம் அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எமது நிகழ்ச்சி நிரலிற்கு உறுதுணையாக அறம் செய் அறக்கட்டளை நிலையம் போன்ற பல்வேறு அமைப்புக்களும் நன்கொடையாளர்களும் மற்றும் கடல் கடந்த உறவுகளும் உதவிக் கொண்டிருப்பது மனமகிழ்வைத் தருவன.

அந்த வகையில் அறம் செய் அறக்கட்டளை நிலையம் ஐக்கிய இராச்சியத்தின் வீரத்தமிழர் முன்னணியின் ஒரு அங்கமாக கிளிநொச்சி பல்லவராயன்கட்டு பகுதியில் செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் அசாதாரண சூழ்நிலையில் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கோடு கல்வி, கலாச்சாரம், பண்பாடுகள், வாழ்வாதாரம் என்பவற்றை மேம்படுத்தி எதிர்கால சந்ததியை பயனுறுதி மிக்கதான ஒரு மக்கள் கூட்டமாக மாற்றுவதை நோக்காக கொண்டு அவர்கள் செயலாற்றிவருகின்றமை மகிழ்வுக்குரியது.

வன்னியில் அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு தமது கண்களை, கால்களை, கைகளை இழந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுயதொழில் வாழ்வாதாரத்திற்காக இதுவரை 1 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளதாக அறியத்தரப்பட்டது. மனித நேயம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இந்த ஒரு நிகழ்வே போதுமானதாகும்.

பல மட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் வாழுகின்ற பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவ மாணவியருக்கு அவர்களின் பட்டப்படிப்புக்களை தொடர்வதற்கான உதவிகளை வழங்கிவருகின்றார்கள். அதே போன்று நீண்ட தூரம் நடந்து சென்று கல்வி பயிலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த நூறு சிறார்களுக்கு மிதிவண்டிகளை வழங்குகின்ற நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றது. சமூக விழுமியங்களின் உயர் பணிகளில் பெரும்பங்கு ஆற்றுகின்ற இந்த நிலையம் சமயப் பணிகளை விருத்தி செய்வதிலும் ஆர்வம் காட்டிவருகின்றது.

பல்லவராயன்கட்டுக் கிராமத்தில் உள்ள 150ற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அறநெறிப் பாடசாலைக் கட்டடம் ஒன்றைப் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்து வருவதுடன் அவர்களின் அறநெறிக் கல்வி மற்றும் மாலை நேரத்தில் கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு, ஆங்கிலம் போன்ற பாடங்களையும் கற்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறிகின்றேன்.

மாணவ மாணவியர்களின் கல்வி மற்றும் சமய அறிவு வளர்ச்சிக்காகப் பாடுபடும் அதே நேரத்தில் மாணவ மாணவியரின் ஒழுக்கங்கள் தொடர்பாகவும், சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படவேண்டும். இன்றைய தொலைத்தொடர்பு சாதனங்களும் இலத்திரனியல் சாதனங்களும் எமது மாணவர்களுக்கு பல வழிகளிலும் அவர்களின் கற்றல் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றது.

 அதே நேரத்தில் அவர்களின் உணர்வுகளை குழப்பக்கூடிய அல்லது இச்சைகளைத் தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகளை படம்பிடித்துக் காட்டக்கூடிய சாதனங்களாகவும் இவை விளங்குவதால் இச் சாதனங்களின் பயன்பாடு தொடர்பில் மாணவ மாணவியர் தெளிவான சிந்தனைகளை கொண்டிருத்தல் அவசியமாகின்றது.

அதே போன்று கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மிகவும் ஒழுக்க சீலர்களாக தம்மிடம் கல்வி கற்கின்ற குழந்தைகளை தமது சொந்தக் குழந்தைகளாக தமது பேரப்பிள்ளைகளாகக் கருதி அவர்களை அன்புடன் ஆதரவுடன் அரவணைத்து நல்ல வழிகாட்டி, சமூகத்தில் நற்பிரஜைகளாக மாற்றவேண்டியது அவர்களின் கடமையும் தார்ப்பரியமும் ஆகும். தினமும் செய்தித்தாள்களில் வருகின்ற செய்திகளை உற்றுநோக்குகின்ற போது எங்கள் சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பது தெரியாத நிலையில் மலைக்க வேண்டியுள்ளது.

ஒரு விளிப்பற்ற வாழ்க்கையில் நாங்கள் அகப்பட்டுள்ளோம் என்று தெரிய வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும் வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புக்களையும் கபளீகரம் செய்வதற்கு கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. நாமோ எதையும் உணராதவர்களாக வாளா மடந்தைகளாக சிறு சிறு மகிழ்ச்சிக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம்.

மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புக்கள் கேள்விக் குறியாக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் இரகசியமாகவும், தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டுவருவது எம்மால் உணரக்கூடியதாக உள்ளது. ஆனால் அதனை எந்த அளவுக்கு எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.  

இந்த இரகசிய நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் எம்மால் முடிந்த வரையில் அல்லும் பகலும் முயன்று வருகின்றோம். எமது முயற்சிகளுக்கு அவ்வப்பகுதிகளில் உள்ள மக்களின் உதவி ஒத்தாசைகள் அவசியம் தேவைப்படுகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுக்களையும் அகழ்ந்துவிட்டு பேரினவாத மக்களின் கலாச்சாரச் சின்னங்களை வேண்டுமென்றே புதைத்து வைப்பதன் மூலம் சில காலங்களின் பின்பு இது தமிழர்களின் வாழ்விடங்கள் அல்ல, பெரும்பான்மை மக்கள் வாழ்ந்த பிரதேசம் என்று கூறும் இவ்வாறான கபட நாடகங்கள் இரவோடு இரவாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

கோயில் விக்கிரகங்கள் களவாடப்படுகின்றன.  எனவே அன்பார்ந்த மக்களே! நீங்கள் மிகவும் விழிப்பாக செயற்படவேண்டிய காலம் இதுவாகும். அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவுகளும் நடவடிக்கைகளும் கவனமாக உற்றுநோக்கப்படவேண்டும்.

கபட நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடிய விடயங்கள் பற்றி உங்களது மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவோ அல்லது எமக்கு நேரடியாகவோ அறியத்தரும் பட்சத்தில் அவ்வாறான நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது வெளிநாடுகளுக்கு படம் பிடித்துக் காட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எம்மால் முன்னெடுக்க முடியும்.

இன்றைய இந்த நிகழ்வில் துவிச்சக்கரவண்டிகளை பெற்றுக் கொண்ட மாணவர்களே மாணவிகளே! உங்கள் துவிச்சக்கர வண்டிகளை கல்வி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துங்கள். நீங்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதில் உங்களை விட உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக பல அமைப்புக்களும் பரோபகாரிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே நீங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்ற உணர்வோடு கல்வியில் மேம்பட்டு சிறந்த கல்வியாளர்களாக எதிர்காலத்தில் மிளிர வேண்டும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.