வடக்கு கல்வி அமைச்சரை விசாரணைக்கு அழைப்பு! கடிதத்தை ஏற்பதற்கு மறுப்பு!

தன்னை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு வருமாறு நேற்று கையளித்த கடிதம் தனக்குரியதல்ல எனக் கூறி ஏற்க மறுத்துள்ளார்  சர்வேஸ்வரன்.

நல்லூர் பகுதியிலுள்ள கல்வியமைச்சு அலுவலகத்துக்கு நேற்று செவ்வாய் முற்பகல் 11.30 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த (ரி.ஐ.டி.) இருவர் சென்றனர். அவர்கள் இருவரும் சர்வேஸ்வரனிடம் எதிர்வரும் 5 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு தெரிவிக்கும் கடிதத்தை கையளித்தனர்.
அக்கடிதத்தில் பெயர் பரமேஸ்வரனென்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அக்கடிதம் தனக்குரியதல்லவெனக் கூறி ஏற்க மறுத்துள்ளார்.
இது குறித்து மாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவிக்கையில் ;
எனக்கு கொடுக்கப்பட்ட கடிதத்தில் யார் என்னை விசாரணைக்கு வருமாறு அழைக்கின்றனர் என்பது குறித்து எதுவும் இல்லாததுடன், என்ன காரணத்துக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட விபரமும் இல்லாதிருந்தது.
அத்துடன் இக்கடிதத்தில் பரமேஸ்வரனுக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு அமைச்சருக்கே இந்த நிலையென்றால் சாதாரணமானவர்களின் நிலைமை என்னவாகும்?
இக்கடிதம் எனக்குரியதல்ல. அவ்வாறு விசாரணைக்கு அழைப்பதாயின் 14 ஆம் திகதிக்குப் பின்னே தனக்கு நேரம் உள்ளதாகவும் கூறி அவர்களை அனுப்பியதாகவும் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
விசாரணைக்கு வருமாறு சர்வேஸ்வரனுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படுகிறது என்பது தொடர்பாக அந்தக் கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படாத போதிலும் , அண்மையில் வடக்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18 ஆம் திகதி வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வடமாகாண சபைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும் அன்று நண்பகல் அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்கள் அனைவரும் , இறுதி தாக்குதலில் உயிரிழந்த பொது மக்களுக்காக அக வணக்கம் செலுத்துமாறும் இவர் அதிபர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தென் பகுதியில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அவரை விசாரணைக்கு வருமாறு பாதுகாப்புத் தரப்பு அழைப்பு விடுப்பதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.