ஓர் புதைகுழிக்காக காத்திருக்கும் உடல்கள்!

நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருந்தான்,சிறிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்காக மக்கள் நிரம்பிவழிந்தார்கள்,நடப்பதற்குகூட முடியாது தள்ளுப்பட்டு ஒருவர்பின் ஒருவர் சென்றுகொண்டிருந்தோம்,
முள்ளிவாய்க்கால்போல் வட்டுவாகல் எமக்கு சாதகமாய் அமைந்திருக்கவில்லை.காடும் சேறும் சகதியுமாகவே இருந்தது,ஈரநிலத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என படுத்திருந்தார்கள்,
இராணுவம் முன்னேறிவர எமது பொருட்களையும் முன்நகர்த்திக்கொண்டே சென்று கொண்டிருந்தோம்,
விடுபட்ட பொருட்கள் எடுப்பதற்கென்று மீண்டும் திரும்பி சென்று எடுத்துவருவதும் மீண்டும் போவதுமாக இருந்தோம்,
இரண்டு கால்களிலும் காயப்பட்டு நடக்கமாட்டாத எம் உறவொருவரை தூக்கிசென்றுகொண்டிருந்தோம்,ஆனால் எம்மால் அவரை தூக்கிச்செல்லமுடியாமலே இருந்தது,
ஏனென்றால் எமது உடல்நிலை திடமாக இல்லை,காய்ஞ்ச மாடு கம்பில பட்டு விழுந்த நிலைதான் எமது நிலையும்,
அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சனநெரிசலில் பல மணிநேர போராட்டத்தோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டு மீண்டும் செல்ல ஆயத்தமானோம்,
எறிகணைகள் விழஆரம்பித்திருந்தது,எப்படியாவது திரும்பிச்சென்று பொருட்கள் எடுத்துவர புறப்பட்டோம்,
எமக்கருகில் பல எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத்தொடங்கியது,ஓடிச்சென்று பங்கரில் குதிப்பதும் ஓடுவதுமாக இருந்தோம்,
அவ்வாறு ஓடிச்சென்று கொண்டிருக்கும்போது எறிகணை ஒன்று எம் அருகில் விழும் நிலையில் வந்தது,
பெரிய ஆலமரம் ஒன்றின்கீழ் வக்கோவால வெட்டப்பட்ட பெரிய கிடங்கு ஒன்று இருந்தது,சரி அதற்குள் குதிப்போம் என்று ஓடினோம்,மரத்தின் கிழையில் கொழுவியபடி சேலன் ஏறிய நிலையில் ஓர் போராளி படுத்திருப்பதை கண்டேன்,
ஓடிச்சென்று அண்ணா செல் வருகுது வங்கருக்க போவம் வாங்கோ என்று கையைப்பிடித்து இழுத்து எழுப்பினேன் அவர் எழும்பேல என்னாலும் தூக்கமுடியாமல் இருந்தது,
அதன்பின்தான் பார்த்தேன் அவர் காயத்தால் சேலன் ஏறிய நிலையில் இறந்திருப்பதை,எமக்கு அருகில் செல் பீஸ்கள் பறந்தடித்து சென்றது,
செல்லுக்கு பயத்தில பங்கருக்க குதிச்சிட்டம்.குதிச்ச பிறகுதான் தெரிஞ்சது அது பிணக்கிடங்கென்று.
போராளிகள் உடல் பொதுமக்கள் உடல்கள் என்று 15 உடல்கள் அளவில் கிடங்கில் இருந்தது,இலையான்கள் எங்கும் குவிந்துகிடந்தது.பாரிய காயப்பட்ட உடல்கள் இரத்தவாடை குமட்டலை ஏற்படுத்தியது,
கிடங்கில் இருக்கமுடியாது,ஆனால் வெளியிலும் வரமுடியாது,செல்லடி நின்றால்மட்டுமே வரமுடியும் என்ற நிலை.எனினும் நான் மேல ஏறிட்டன் கிடங்கைவிட்டு,
மனமெல்லாம் வேதனையில் துடித்தது.இப்படியே விட்டு இந்த கிடங்கைகூட மூடாமல் உடல்களை போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள் என்று எண்ணி,
இராணுவம் நெருங்கி வந்துகொண்டிருந்ததால் திரும்பிவந்துவிட்டோம்,நாம் திரும்பி வரும்போது செல்லில் இறந்த உடல்கள் அப்படியே ஆங்காங்கே கிடந்தது.காயத்திற்கு மருந்துகட்டுவதற்கே ஒருவரும் இல்லை என்ற நிலை,
இது நடந்தது இறுதி நாட்களான 16 ஆம் திகதி என்பதால் பாரிய காயக்காறர்கள் இரத்தம்போயே இறக்கத்தொடங்கினபொழுதுகள்,
எம்மவர்களை புதைப்பதற்குகூட முடியாமல் அப்படியே விட்டுவந்தோம் என்றும் நினைக்கும்போது மனம் வேதனையில் துடிக்கிறது.
Powered by Blogger.