முள்ளிவாய்க்கால் படுகொலை- குருதியால் வரையப்பட்ட தமிழர் காவியம்!

முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க
முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் இன்றாகும்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலை நாளை நினைவில் நிறுத்தி அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.
2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
சகோதர நாடெனக் கூறப்படும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கர வாத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின் அழிப்பினை நிகழ்த்திவிட்டு வெற்றிக் களிப்பில் உள்ளது சிங்கள அரசு.
பொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களை எறிகணைத் தாக்குதல்களாலும் ஷெல் வீச்சுக்களாலும் கோரத் தாண்டவமாடி கொலைக்களமாக்கியது சிங்களப்படை.
விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துவிடவேண்டுமென்றும், தாக்குதல் திட்டத்தினை திசைமாற்றிவிடக் கூடாது என்பதற்காகவும் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது மிகமோசமான திட்டமிட்ட தாக்குதல்களைச் செய்தனர்.
துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, பாதுகாப்பு வலயமென புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக மகிந்த அரசாங்கம் அறிவித்த இப்பகுதிகளில் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள். இந்நிலையில், 2009 மே18 இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவித்தது மகிந்த அரசு.
முள்ளிவாய்க்கால் மண்ணில் மூச்சடங்கியவர்கள் போக எஞ்சியவர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு, தரம்பிரிக்கப்பட்டார்கள். அவ்வாறு தரம்பிரிக்கப்பட்டவர்களில் சிலர் சிறைக்குச் செல்ல, பலர் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இற்றைவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காவியம் முற்றுப் பெறவில்லை. அந்தவகையில், கடந்த 2009இல் இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புலம்பெயர் சமூகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் மாணவர்களும், ஐநா சபை இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தக் கோரியும், தண்டனை வழங்குமாறும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தாயக மக்களுக்காக போராடும் புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகள், ஒன்றிணைந்து நீதிகேட்டு போராட்டமாக வெடிக்கும் போது, அது அனைத்துலக சமூகங்களுக்கு கொடுக்கப்படும் பாரிய அழுத்தமாகவே காணப்படும்.
இந்நிலையில், சர்வதேச சமூகங்களால் பாரிய எழுச்சியாக நினைவு கூரப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் தாயக மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.