சம்பந்தன் விலக வேண்டும்!

வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநியாக இருந்துக்கொண்டு, அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறைகாட்டாத இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்ததாகவும் கூட்டமைப்புக்கான மக்கள் செல்வாக்கும், பாரியளவில் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து, சம்பந்தன் விலக வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இரா.சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துக்கொண்டு,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாத்து, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாரெனவும் குற்றஞ்சாட்டிய பீரிஸ், உலக நாடுகளிலுள்ள எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும், தங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (08), கொழும்பு - புஞ்சிபொரளையில் உள்ள வஜிராராம பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஜேர்மன் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு, கழிவுத் தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், நம் நாட்டுத் தேயிலை புறக்கணிக்கப்படுவதாகவும் இது தொடர்பில், அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, எமது நாட்டில் இதுவரை காலமும் ஆட்சியிலிருந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் எவரும் பெற்றிராத தோல்வியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடைந்துள்ளாரெனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவாராயின், 5 சதவீத வாக்குகளையே பெறுவாரென்றும் குறிப்பிட்டார்.
மக்கள் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின், நாடாளுமன்றத்தைக் களைத்து, பொதுத்தேர்தலை நடத்தி, மக்களுக்குத் தேவையான அரசாங்கத்தை, மக்களே அமைப்பதற்கு வழிசெய்ய வேண்டுமென்றும், ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத்தைக் களைத்து, பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி, எதிர்வரும் வாரங்களில், ஒன்றிணைந்த எதிரணியால், பாரிய போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதென, அவர் மேலும் கூறினார். 
Powered by Blogger.