புலனாய்வுத்துறையினர் தமிழ்ப் பெண்கள் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தல்!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என பல பெண்களை புலனாய்வுத்துறையினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துவதாக, மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைகளை நேற்று சனிக்கிழமை முதல் கட்டமாக மன்னாரில் ஆரம்பித்துள்ளது.

காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலமையில் 7 ஆணையாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் இடம் பெற்ற போதே மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆணைக்குழு முன் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களிடமும் இறுதியாக ஊடக சந்திப்பை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

எனினும் தம்மிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் போது குறித்த மண்டபத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

அனுமதிக்கும் பட்சத்தில் தாம் கலந்து கொண்டு கருத்துக்கள் மற்றும் அலோசனைகளை வழங்க முடியும் என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மண்டபத்தினுள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் போது காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமயில் 7 ஆணையாயர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர்.

இதன் போது கருத்துக்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் பின்வருமாறு தெரிவித்தனர்..,

எமது உறவுகள் தொடர்பாக நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். அவர்களை கணடறிய அரசுக்கு நாம் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்து வந்தோம் ஆனால் எந்த அழுத்தமும் பயணளிக்கவில்லை.

எமது உறவுகளை தேடி தினம் தினம் அழைந்து திரிகின்றோம். பல்வேறு முகாம்களுக்கும் தேடிச் சென்றோம்.

கடந்த காலம் தொட்டு தற்போது வரை எமது வீடுகளுக்கு புலனாய்வுத்துறையினர் வந்து விசாரிக்கின்றனர்.

எங்களை அச்சறுத்தும் வகையில் நடந்து கொள்ளுகின்றனர். எத்தனையோ ஆணைக்குழுக்களிடம் நாங்கள் முறைப்பாடுகளை செய்து விட்டோம்.

இது வரை எமக்கு எவ்வித முடிவுகளும் இல்லை. எமது உறவுகள் காணாமல் போனவர்கள் இல்லை. பலவந்ததாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை வீடுகளில் வைத்தும், வீதிகளில் வைத்தும் படையினரின் கட்டுப்பாட்டு பகுதியில் வைத்தும் கடத்தியுள்ளனர். இன்று நல்லாட்சி அரசு ஏற்பட்டும் எமது உறவுகளுக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை.

இலங்கையில் காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அப்போது எமது பிள்ளைகளையும், உறவுகளையும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களா கடத்திச் சென்றுள்ளனர் என உறவுகள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு விதமான கருத்துக்களை வழங்கினர். மேலும் பல்வேறு பெண்களை புலனாய்வுத்துறையினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என தம்மை அச்சுறுத்தவதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது பதில் வழங்கிய காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் புலனாய்வாளர்கள் உங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் பட்சத்தில் எமக்கு முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கு முடியும் எனவும், அதற்கான அதிகாரம் தமக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் தமக்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பில் நம்பிக்கை இல்லை எனவும், குறிப்பாக 'காணாமல் போனோர்' என்ற வசனத்தை 'காணாமல் ஆக்கப்பட்டோர்' என்று மாற்ற கோரி கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஆனால் இன்று வரை மாற்றப்படவில்லை. எனவே மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டவர்கள் சார்பாக தமக்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பில் நம்பிக்கை இல்லை என பகிரங்கமாக தெரிவித்தனர்.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் என பல நூற்றுக்கனக்கானவர் கலந்து கொண்டதோடு, குறித்த காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.