ஒலிம்பிக் வீரர்களைக் கௌரவிக்கும் `ஒலிம்பிக் டே 2018'!

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள வீரர்களைக் கௌரவிக்க சென்னையில் `ஒலிம்பிக் டே 2018' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உலகின் முதன்மையான விளையாட்டு போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதற்காக அந்த வீரர்/ வீராங்கனை தன் வாழ்நாளில் 10 முதல் 15 ஆண்டுகள் கடுமையாக போராடியிருக்க வேண்டும். கடும் போராட்டங்களுக்கு இடையே வெற்றி பெற்று சாதனைப் படைத்த அந்த நபர்களை நாம் அன்றாட வாழ்வில் பலமுறை பஸ்ஸிலோ; ரயிலிலோ மிகச் சாதாரணமாக கடந்து சென்றிருப்போம். இதில் சோகம் என்னவென்றால் அவர் தான் ஒலிம்பிக் சாதனையாளர் என்று கூட நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தமிழகத்தில் மட்டும் இதுவரை 23 ஒலிம்பிக் சாதனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக `ஒலிம்பிக் டே 2018' என்ற நிகழ்ச்சி ஒன்றை தமிழக ஹாக்கி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை எக்மோரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நாளை (ஜூன் 28) மதியம் 3.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனைப் படைத்த தமிழக வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுடன் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளை வென்றவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி அழைக்கப்பட்டுள்ளார். அவருடன் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறையின் பிரதான செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ், ரீத்தா ஹரிஷ் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர்), ஜே.எம்.பெர்னாண்டோ (தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கச் செயலாளர்), உமாபதி ஜெயகிருஷ்ணன் (தமிழ்நாடு விளையாட்டு சங்கத் தலைவர்), ஆர்.ராஜ்குமார்(எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர்) உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.