மெஸ்ஸியின் கடைசி 4 நிமிடங்கள்!

மெஸ்ஸி சரியாகச் செயல்படாததே கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவின் நிலைக்குக் காரணம்
என்று பல்வேறு விமர்சகர்களாலும் கருத்து சொல்லப்பட்டது. கடைசிப் போட்டியில் மெஸ்ஸி உதவினால் மட்டுமே அர்ஜெண்டினா வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குச் செல்லும் என்றும் பேசப்பட்டது.
அனைவரின் ஆசையையும் நைஜீரியாவுடன் தொடங்கிய மூன்றாவது போட்டியின் 14ஆவது நிமிடத்திலேயே பூர்த்திசெய்தார் மெஸ்ஸி. முதல் பாதி முழுக்க நைஜீரிய வீரர்களால் எந்த கோலும் அடிக்க முடியாததால் அர்ஜெண்டினாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது ரசிகர்களால். ஆனால், உடை மாற்றும் அறையில் நைஜீரிய வீரர்கள் உருவாக்கிய திட்டத்தின் பலனாக, 51ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி வாய்ப்பு உருவாக்கப்பட்டு மெஸ்ஸியின் கோல் சமன் செய்யப்பட்டது.
தோற்றாலும் டிரா செய்தாலும் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறும் நிலையிலிருக்கும் அர்ஜெண்டினாவுக்கு இது அசாதாரணமான ஒன்றாக இருந்தது. மைதானத்தில் கூடியிருந்தவர்கள் அனைவரின் பார்வையும் மெஸ்ஸி மீது திரும்பியது. ஓடினார், ஓடினார் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மெஸ்ஸி ஓடிக்கொண்டே இருந்தார். ஆனால், அவரால் கடைசி வரை கோல் அடிக்கவே முடியவில்லை. அத்தனைப் பெரிய நட்சத்திரத்தை இத்தனை எளிதில் தடுத்துவிடமுடியுமா என ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு நைஜீரியர்கள் செயல்பட்டனர்.
நைஜீரிய வீரர்களின் பெரும் கவனம் மெஸ்ஸியைத் தடுப்பதிலேயே இருந்தது. இதற்காக மெஸ்ஸியை வட்டமிட்டிருந்தால்கூட அது சாத்தியப்பட்டிருக்காது. ஆனால், மெஸ்ஸிக்குப் பந்தை பாஸ் செய்யக்கூடிய அனைவரையும் தடுப்பதிலேயே அவர்கள் கவனமாக இருந்தனர்.
அர்ஜெண்டினாவின் திட்டங்கள் அனைத்திலும் மெஸ்ஸி நீக்கமற நிறைந்திருப்பார். ஒரு கோல் உருவாக முக்கியக் காரணமான கீ பாஸிங் (Key Passing), அசிஸ்ட் (Assist) ஆகியவற்றில் மெஸ்ஸி இடம்பெற்றிருப்பார். அப்படி இல்லையென்றால் கோல் அடிப்பவராக இருப்பார். இவை மூன்றிலிருந்தும் மெஸ்ஸியைத் தடுப்பதைவிட, மற்றவர்களிடமிருந்து செல்லும் பந்தைத் தடுத்துவிட முனைப்புடன் ஈடுபட்டனர் நைஜீரிய அணியினர். நைஜீரியாவின் பெனால்ட்டி பகுதிக்குள் சென்றுவர மெஸ்ஸிக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால், மற்றவர்களும் பந்தும் நைஜீரியாவின் பெனால்ட்டி பகுதியிலிருந்து தூர வீசப்பட்டது.
காலில் கிடைத்த பந்துகளை பாரபட்சமின்றி போஸ்டை நோக்கி உதைத்தனர் அர்ஜெண்டினா அணியினர். முடிந்தால் கோல் அடித்துக்கொள்ளுங்கள் என நைஜீரிய ஸ்டிரைக்கர்ஸ் பணிக்கப்பட்டார்கள். இதனால் நைஜீரியாவாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், அர்ஜெண்டினாவின் டிஃபண்டர் மஸ்கரெனோவின் நெற்றி பதம் பார்க்கப்பட்டது. இரத்தம் வழிய வழிய விளையாடிக்கொண்டே இருந்தார். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல, நைஜீரியர்களுக்கு கடைசி 15 நிமிடத்தில் ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைக்கப்பார்த்தது.
உயரத்திலிருந்து விழுந்த பந்தினை, அர்ஜெண்டினா டிஃபண்டர்கள் விரட்டியபோது கைகளில் பட்டுவிட்டதாக நைஜீரிய அணியினர் நடுவரிடம் முறையிட்டனர். அதன்படி வீடியோ நடுவருக்குச் சென்ற பஞ்சாயத்தில் கைகளில் பட்டுவிட்டதாக பதில் கிடைத்தது. அந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்த்த நடுவர், கையில் படுவதற்கு முன்பாகத் தலையில் பட்டதால் பெனால்ட்டி வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டனர். இதனால், நைஜீரிய அணியினர் சோர்வடைந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மெஸ்ஸி இல்லாமலேயே கோல் அடிக்க முயற்சித்தனர் அர்ஜெண்டினா வீரர்கள்.
ஒரு நட்சத்திர வீரரைக் குறிவைத்து விரட்டும்போது, அவரைக் கேடயமாகப் பயன்படுத்தி மற்ற வீரர்கள் கோல் அடிப்பது கால்பந்தாட்டத்தின் சாதாரணமான திட்டங்களில் ஒன்று. ஆனால், அர்ஜெண்டினா அதற்குத் தயாராக இல்லை. அர்ஜெண்டினா ரசிகர்கள் மட்டுமல்லாது வீரர்களேகூட அதற்குத் தயாராக இல்லை. ஒரு கால்பந்தாட்ட வீரனின் காலில் பந்து கிடைத்ததும், அதை எங்கு உதைக்க வேண்டும் என்ற முடிவை அவர் மட்டும்தான் எடுக்க வேண்டும். மற்றவர்களின் கட்டளைக்குக் கீழ்படிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பெனால்டி ஏரியாவுக்குள் எங்கு ஃபவுல் ஆனாலும், நடுவில் பந்தை வைக்கவேண்டும் என்ற விதிமுறையின்படி, யாரிடம் பந்து கிடைத்தாலும் மெஸ்ஸியிடம் பந்து கொடுப்பதை அர்ஜெண்டினா வீரர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். இந்த வழக்கத்தை 86ஆவது நிமிடத்தில் மாற்றியவர் அர்ஜெண்டினாவின் மிட்ஃபீல்டர் மெர்காடோ.
இடது பக்கத்திலிருந்து கிராஸ் திசையில் பந்தினை உதைக்கத் தயாரான மெர்காடோ, பெனால்ட்டி ஏரியாவின் இடதுபுறம் நின்றிருந்த மெஸ்ஸிக்குப் பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த மார்கஸ் ரோஜோவுக்குப் பந்தினை பாஸ் செய்தார். 6 திசைகளில் மெஸ்ஸியைச் சூழ்ந்துகொண்டு தயாராக இருந்த நைஜீரிய வீரர்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் ரோஜோ கோல் அடித்து, அர்ஜெண்டினாவின் கால்பந்தாட்ட வரலாற்றில் இடம்பிடித்தார். கடைசி நான்கு நிமிடங்கள் நைஜீரியர்கள் கோல் அடிக்காமல் இருந்தால் வெற்றி என்ற நிலையில் அர்ஜெண்டினா மிகக் கவனமாக விளையாடியது. அவர்கள் எதிர்பார்த்த 90ஆவது நிமிடமும் வந்தது. ஆனால், ஆட்டத்தின் இடையில் வீணடிக்கப்பட்ட நேரத்தை எக்ஸ்ட்ரா டைமாகக் கொடுத்தார் நடுவர். இதனால், மேலும் 4 நிமிடங்களைக் கடக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது அர்ஜெண்டினா.
நைஜீரியாவின் கோல் போஸ்டை நோக்கி ஓடுவதும், அவர்களுக்குள்ளாக பாஸ் செய்வதும் என இரண்டு நிமிடங்கள் ஓடிய பின், மெஸ்ஸி எதிரிக் கோட்டைக்குள் நுழைந்தார். அவரை, எப்படியும் தடுப்பதென முயற்சி செய்த நைஜீரியர்கள் இரண்டு முறை மெஸ்ஸியைத் தள்ளிவிட்டார்கள். அப்போது வழங்கப்பட்ட ஃப்ரீ கிக் வாய்ப்புகளை கோலாக்க முயற்சி செய்யாமல், நேரத்தை வீணாக்கி கடைசி 2 நிமிடத்தைக் கடத்த மெஸ்ஸி முயற்சி செய்தார். இதனால், அவருக்கு ஒரு யெல்லோ கார்டு நடுவரால் பரிசளிக்கப்பட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் கடைசி நிமிடத்தையும் கடத்திய அர்ஜெண்டினா வீரர்கள், நேரம் முடிந்ததும் வெற்றிக் களிப்பில் கொண்டாடினார்கள். அதுவரை அமைதியாக உட்கார்ந்திருந்த மரடோனா நடுவிரலையெல்லாம் காட்டி மகிழ்ச்சிக் கூத்தாடினார். ஒரு வழியாக அர்ஜெண்டினா ‘Round 16’க்குள் நுழைந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.