எட்டு வழிச் சாலை: தினகரன் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

சென்னை- சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிராக அமமுக சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை – சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் எட்டுவழி பசுமைச் சாலை அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலுக்கான அளவீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


எட்டுவழிச் சாலைக்கு நிலம் தர விவசாயிகள் மறுப்பு தெரிவித்து வருவதோடு, திட்டத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்திவருகின்றனர். எனினும் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எட்டு வழிச் சாலைக்கு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எட்டு வழிச் சாலை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் கடந்த 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதேபோல், பாதிக்கப்படும் மாவட்ட மக்களை பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார். இடதுசாரிகளும் எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
எட்டு வழிச் சாலைக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி அவசர கதியில் அரசு செயல்படுத்தத் துவங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.விவசாயத்தைத் தாரைவார்த்து அமைக்கப்படும் எந்தத் திட்டமும் தமிழகத்துக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள தினகரன், “தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வாழ்ந்து வரக்கூடிய விவசாயிகளையும் முதியவர்களையும் பெண்களையும் காவல் துறையைக் கொண்டு மிகக் கடுமையாக முடக்குவது மனிதத் தன்மையற்ற செயல். அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் விளை நிலங்களையும் விவசாயத்தையும் காத்திடவும் ஜூலை 6ஆம் தேதி திருவண்ணாமலையிலும் ஜூலை 9ஆம் தேதி தருமபுரி மாவட்டம் அரூரிலும் மாலை 5 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அறிவித்துள்ளார்.
Powered by Blogger.