மருத்துவ மாணவர் உள்பட 6 பேர் மீது என்எஸ்ஏ வழக்கு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக மருத்துவ மாணவர் உள்பட ஆறு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான பிரச்சனைகள் சிறிது சிறிதாக முடிவடைந்து வருவதாக நாம் நினைத்தாலும், போலீஸார் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைந்து ஆண்களை கைது செய்து வருகின்றனர். இதுவரை, 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். சிறையில் உள்ளவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர் கலில் ரகுமான். இவரோடு இந்த அமைப்பை சேராத அவரது மகன்கள் முகமது அனாஸ், முகமது இர்ஷாத் மற்றும் கோட்டயன், சரவணன், வேல்முருகன் ஆகிய 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஹோமியோபதி மருத்துவ படிப்பும், இவரது சகோதரர் முகமது இர்ஷாத், நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்ட படிப்பும் படித்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், கைதான 3 பேரின் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கலில் ரகுமானின் மனைவி நசீபா பானு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதுகுறித்து நசீபா பானு கூறுகையில், இந்த ரம்ஜானுக்கு என் கணவரும்,மகன்களும் சிறையில் இருக்கின்றனர். அவர்களை போலீஸ் கைது செய்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. என் இரண்டு மகன்களின் எதிர்காலம் எப்படி அமையுமோ, அவர்களின் படிப்பு என்ன ஆகுமோ என்ற பயம் இருக்கிறது என கூறினார்.

துப்பாக்கி சூடு தொடர்பான பல்வேறு ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இன்னும் மாவட்ட போலீசார் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கவில்லை. அவற்றை சிபிசிஐடி போலீசார் பெற்று, ஆய்வுக்கூட்டத்துக்கு அனுப்பி உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும். இதற்கு பின்னர்தான், போலீஸ் விதிமீறல் நடந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.