தமிழகத்தில் 76 காவல் மரணங்கள்!

தமிழகத்தில், 11 மாதங்களில் போலீஸ் விசாரணையின்போது 76 கைதிகள் மரணமடைந்துள்ளனர் என மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் இந்தியாவில் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் மரணங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அது தொடர்பான முடிவுகள் நேற்று (ஜூன் 26) வெளியிடப்பட்டது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை போலீஸ் விசாரணையின்போது, கிட்டதட்ட 1,674 கைதிகள் இறந்துள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு ஐந்து கைதிகள் மரணிக்கின்றனர். 1530 பேர் நீதிமன்ற காவலிலும், மீதமுள்ளவர்கள் போலீஸ் காவலின் போதும் மரணித்துள்ளனர்.

மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் சமர்பித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் போலீஸ் காவலின்போது 76 கைதிகள் மரணித்துள்ளனர். இதில், 65 பேர் நீதிமன்ற காவலிலும்,மீதமுள்ளவர்கள் போலீஸ் காவலிலும் மரணித்துள்ளனர். இந்த எண்ணிக்கையில், தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் 35 கைதிகளும்,கேரளாவில் 35 கைதிகளும் மரணித்துள்ளனர். தெலங்கானாவில் 17 கைதிகளிலும், கர்நாடகாவில் 15 கைதிகளும் மரணித்துள்ளனர். ஆனால், புதுச்சேரியில் மட்டும் எந்த மரணங்களும் நிகழவில்லை. உத்தரப் பிரதேசத்தில் 374 கைதிகளும், மகாராஷ்டிராவில் 137 கைதிகளும், மேற்வங்கத்தில் 132 கைதிகளும் மரணித்துள்ளனர்.

கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு ஏற்படும் மரணங்களுக்கு எதிராக ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும். இதுபோன்ற மரணங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.