சைக்கோவுடன் போராடும் நயன்தாரா!

நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இமைக்கா
நொடிகள் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது.
அதர்வா, ராஷி கண்ணா இணைந்து நடிக்க பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். டிமாண்டி காலனி படம் மூலம் கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்து சைக்கோ த்ரில்லர் பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
சைக்கோ கொலைகாரனாக வலம் வரும்கிறார் அனுராக் காஷ்யப். கொலைகள் செய்வதையே காதலாகக் கொண்டு சுற்றிவரும் அவரை சிபிஐ அதிகாரியாக வரும் நயன்தாரா பிடிக்கப் போராடுகிறார். “முடிந்தால் என்னை ஸ்டாப் பண்ணு” என்று போனில் எச்சரிக்கும் அனுராக்கை நயன்தாரா பிடித்தாரா என்பதாகக் கதை விரியும் என்பதை ட்ரெய்லரை பார்க்கும்போது உணரமுடிகிறது.
த்ரில்லராக நகரும் கதையில் அதர்வா, ராஷி கண்ணா பகுதி கலர்ஃபுல்லாக வருகிறது. டாக்டர் வேடத்தில் நடிக்கும் அவரையும் சைக்கோ கதாபாத்திரம் விடவில்லை. புத்திசாலித்தனமாகக் கொலைகளை நிகழ்த்தும் சைக்கோவின் கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யப் அருமையாகப் பொருந்தியுள்ளார். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிடம் கூறும் “ஆர் யூ ஓகே பேபி” என்ற பிரபலமான வசனத்தைக் கூறுகிறார். படம் முழுக்க நயன்தாரா சிபிஐ அதிகாரியாக மிரட்ட இறுதியில் அவரது கணவராக விஜய் சேதுபதி எண்ட்ரி கொடுக்க உள்ளார் என்று யூகிக்கலாம்.
கடந்த ஆண்டு மே மாதம் இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஒரு ஆண்டுக்குப் பின்னர் படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.
கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, “படத்தின் கதை முடிவான பிறகு கதை தனக்குத் தேவையான நடிகர்களைத் தானே எடுத்துக்கொண்டது. நான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே ஆர்டி ராஜசேகர் சாரின் ரசிகன். அவரின் கரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். என் படங்களுக்குத் தமிழ் தலைப்புகளை வைக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம். முதல் படத்தில் அதைச் செய்ய முடியவில்லை. இந்தப் படத்தில் உதவி இயக்குநர் சொன்ன ஒரு தலைப்பு பொருத்தமாக இருந்தது, அதையே வைத்துவிட்டோம். குழந்தைகளை நடிக்க வைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அந்த மாதிரி படங்கள் செய்துவிடக் கூடாது என நினைத்தேன், ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு குழந்தை கதாபாத்திரம் அமைந்தது. அதில் மானசி சிறப்பாக நடித்துக் கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.