சி.தவராசாக்கு பிச்சையாக ரூபாவை ஒப்படைக்கும் கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம்!

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7000 ரூபாவை அவரிடம் ஒப்படைக்க உதவுமாறு வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இந்த விடயத்தை அறிவிக்கும் வகையில், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வட மாகாண அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மே 18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தலுக்காக வட மாகாண சபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட தலா 7000 ரூபாவை திருப்பி வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா விடுத்த வேண்டுகோள் அதிர்ச்சியளித்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 18 என்பது தனியே முள்ளிவாய்க்காலுடன் சம்பந்தப்பட்டது அல்லவெனவும் அது சம்பூர் தொடங்கி வாகரை வழியாகவும், பின்னர் மடு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையும் நீண்ட ஒரு இன அழிப்பினை நினைவுகூர்வதாகவும் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் தமிழ் தேசிய உணர்வு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் 7000 பேரிடம் தலா ஒரு ரூபா வீதம் நிதி சேகரிக்கப்பட்டதாகவும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை வட , கிழக்கின் இணைப்புப் பாலமாக தாம் கருதுவதாகவும் கிழக்கு பல்லைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதி குறித்த பிரமுகரிடம் வட மாகாண அவைத் தலைவர் ஊடாக சேர்ப்பதே முறையானது எனவும் ஒன்றியத்தின் செயலாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக தலா 1 ரூபா வீதம் வழங்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாணவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நிதியை சி.தவராசாவிடம் ஒப்படைக்க உதவுமாறும் வட மாகாண அவைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையில் “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு” எனும் திருக்குறளை சொல்லி அதன் பொருள் விளக்கத்தை வழங்குமாறும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வட மாகாண அவைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
Powered by Blogger.