ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் முதல் கதாநாயகி யூனிஸ் கேசன் காலமானார்!

பிரபல ஆங்கில நாவலாசிரியர் இயான் பிளமிங்ஸ் எழுதிய துப்பறியும் நாவல் கதைகளை பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஹாலிவுட் படத் தயாரிப்பாளரான ஆல்பர்ட் ஆர் பிரக்கோலி இறங்கினார். 

‘ஜேம்ஸ் பாண்ட்’ என்னும் சகலாகலா வல்ல சாகச துப்பறிவாளரை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த கதைகளில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் பிரிட்டன் நாட்டின் பின்னணியில் நடப்பதுபோல் அமைந்திருப்பதால் இந்த வரிசையின் பெரும்பாலான படங்கள் அமெரிக்காவுக்கு வெளியே பிரிட்டனிலும் பிறநாடுகளிலும் படமாக்கப்பட்டன.
இந்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தில் கதாநாயகனாக சீன் கேனரி மற்றும் கதாநாயகியாக யூனிஸ் கேசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் 1962-ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.
இதன் பின்னரும் ‘பிரம் ரஷியா வித் லவ்’ என்னும் படத்தில் சீன் கேனரி – யூனிஸ் கேசன் ஜோடியாக இணைந்து நடித்தனர். பின்னர், வேறு சில ஹாலிவுட் படங்களில் நடித்த யூனிஸ் கேசன், பிற்காலத்தில் தொலைக்காட்சி நாடகங்களிலும், தொடர்களிலும் தோன்றினார்.
சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த யூனிஸ் கேசன் கடந்த 8-ம் தேதி லண்டன் நகரில் உள்ள இல்லத்தில் தனது 90-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு முதன்முதலாக ஜேம்ஸ் பாண்ட் படத்தின் நாயகியாக நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஹாலிவுட், பிரிட்டன் திரையுலக பிரமுகர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர். 
Powered by Blogger.