ரஜினிக்கு எதிராக மனு தாக்கல்!

ஓசூர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களைச் சந்தித்து பல்வேறு கட்சியினரும், நடிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர். கடந்த மே 30ஆம் தேதி நடிகர் ரஜினியும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே கலவரம் ஏற்பட்டதாகவும், வன்முறை நடத்தியவர்களைச் சமூக விரோதிகள் எனவும் விமர்சித்திருந்தார்.

போராட்டம் நடத்தியவர்களைப் பற்றி தவறான கருத்து தெரிவித்ததாக ரஜினி மீது ஓசூர் காவல் நிலையத்தில், சிலம்பரசன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்படாததையடுத்து, நடிகர் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சிலம்பரசன் ஜூன் 7ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஜுன் 13ஆம் தேதி நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்மந்தபட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

இதனையடுத்து ஓசூர் நகரக் காவல் துறை ரஜினி மீதான புகாரின் மீது சிஎஸ்ஆர் வழங்கியது எனினும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இதுவரை வழக்குப் பதிவு செய்யாததை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சிலம்பரசன் ஓசூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.