யுத்தகால வெடிப்பொருட்களால் வடக்கு - கிழக்கு மக்களுக்கு சுகாதார பாதிப்பு!

முன்னாள் யுத்த பிரதேசங்களில் பாவிக்கப்பட்ட வெடிபொருட்களால், அங்கு வசிக்கின்ற மக்கள் சுகாதார, பொருளாதார மற்றும் சுற்றாடல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆயுத வன்முறைக்கு எதிரான செயற்பாட்டு அமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களிடையே நடத்திய செவ்விகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் பெருமளவில் மன அழுத்தம் உள்ளிட்ட உளரீதியான தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

 அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற போதும், இரண்டு உளவியலாளர்கள் மாத்திரமே இருக்கின்றனர். அங்கு 30 சதவீதமாக இருந்த மனவழுத்தம் கொண்டோரின் எண்ணிக்கை, யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் 48 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக சிறார்களும் அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இயங்கும் தன்னார்வ அமைப்பு ஒன்றின் தகவலுக்கு அமைய, வடக்கு கிழக்கில் மாதாந்தம் 30 பெண்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேநேரம் பாவிக்கப்பட்ட வெடிப்பொருட்கள் மற்றும் புதைத்து வைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளாலும் மக்கள் ஆபத்துகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

 2010ம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு நிலக்கண்ணி வெடிகளின் வெடிப்புகளால் 285 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் வடக்கு கிழக்கு மக்களுக்கு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.