கல்முனை பன்சல வீதியை ஒரு வழிப்பாதையாக கட்டுப்படுத்த நடவடிக்கை!

கல்முனை பொதுச்சந்தையை ஊடறுத்து செல்லும் பன்சல வீதியை
தினசரி காலை 07.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை ஒரு வழிப்பாதையாக மாத்திரம் பயன்படுத்துவதற்கும் இவ்வீதியின் ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையில், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கல்முனை பொதுச் சந்தை இயங்கும் நேரங்களில் பன்சல வீதியில் ஏற்படுகின்ற வாகன நெரிசல் காரணமாக வர்த்தகர்களும் நுகர்வோரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் வீதியோர வியாபார நடவடிக்கைகளினால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதுடன் சந்தையின் உள்ளக வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.