எதிர்ப்பு தெரிவித்த நடிகைகளுக்கு குவியும் ஆதரவு!

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி நடிகைகள் சிலர்
அந்த அமைப்பில் இருந்து விலகியுள்ளனர். விலகிய நடிகைகளுக்கு ஆதரவாகப் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அம்மாவின் பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் கூட்டுமாறு நடிகை ரேவதி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பிற்குப் போட்டியின்றி நடிகர் மோகன் லால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வமைப்பில் ஏற்கனவே அமைப்பின் பொருளாளராக இருந்து நடிகை கடத்தல் வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற திலீப் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் அவர் ‘அம்மா’ அமைப்பில் இணைந்துள்ளார். திலீப் மீண்டும் இணைந்ததை அடுத்து, திலீப்பால் பாதிப்பிற்குள்ளான நடிகை முதலில் அதிலிருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக மூன்று நடிகைகளும் அம்மா அமைப்பில் இருந்து விலகினர். இவர்களின் இந்தச் செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

இவர்களுக்கு ஆதரவாக அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முரளீதரன் கூறுகையில், ``அம்மா அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லால் தேர்வானதும் எடுக்கப்பட்ட முடிவு காரணமாக சங்கத்தில் உள்ள அனைவரும் சமம் என்பதற்குப் பதிலாக ஒரு சிலர் மட்டுமே உயர்ந்தவர்கள் என்கிற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் கேரள நடிகர் சங்கத்திலிருந்து 4 நடிகைகள் விலகியிருக்கும் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இனிமேலாவது மோகன்லால், நடிகர் சங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்’’ என்றார்.கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தம், “நடிகைகளின் இந்த முடிவு துணிச்சலானது” எனப் பாராட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வி.டி. பல்ராம் உள்ளிட்டோரும் நடிகைகளின் துணிச்சலான முடிவைப் பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர பலரும் தங்களது சமூக ஊடகங்களின் வழியாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்

வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஹரிஷ் வாசுதேவன் ஸ்ரீதேவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “எந்த நடிகர்களை நாங்கள் விரும்பி பார்த்து அவர்களை ஸ்டாராக மாற்றினோமோ அவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். அமைப்பிலிருந்து விலகிய நடிகைகள் அனைவரும், தங்களுக்கு ஊதியம் சரிவர வரவில்லையென்றோ, தனிப்பட்ட சுய காரணங்களுக்காகவோ விலகவில்லை. மலையாளத் திரை உலகில் அனைத்து பெண் நட்சத்திரங்களும் மரியாதையுடனும், சமத்துவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விலகியுள்ளனர். ‘அம்மா’வில் தொடரும் நடிகர்களின் படங்களை இனி நான் பார்க்கப் போவதில்லை. என் நண்பர்களிடத்திலும் இதை வலியுறுத்தப் போகிறேன். ‘அம்மா’விற்கு எதிராக உள்ள நடிகர்களின் படங்களையே இனி பார்க்கப் போகிறோம். இத்தகைய நடிகர்கள் முறையாக வருமான வரி தாக்கல் செய்கின்றனரா என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மலையாள குணச்சித்திர நடிகரான திலகன், அப்போதைய நடிகர் சங்கப் பொதுச் செயலாளரான மோகன்லாலுக்கு எழுதிய கடிதம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 8 வருடங்களுக்குப் பின்னர் வெளியான அந்தக் கடிதத்தில், “சில இயக்குநர்கள் என்னைத் திட்டமிட்டு நடிக்கவிடாமல் வெளியேற்ற வைத்திருக்கிறார்கள். நடிகரும் அரசியல்வாதியுமான கே.பி.கணேஷ்குமார் என்னைப் போனில் அழைத்து அசிங்கமாகத் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தார். அது பற்றி நடிகர் சங்கத்தில் புகார் செய்தும் எதுவுமே தெரியாதது போல சங்க நிர்வாகிகள் நடந்துகொண்டார்கள். முன்னணி நடிகர்கள் விவகாரங்களில் உடனுக்குடன் ஓடிச் சென்று உதவி செய்யும் நடிகர் சங்கம், சாதாரண உறுப்பினர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறானது. நான் யாருடைய மனதையாவது புண்படுத்தியதாக நிரூபித்தால் அதற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன். நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் பாரபட்சம் நீடிக்குமானால், சங்கமே அழிந்துவிடும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தை வெளியிட்ட நடிகர் திலகனின் மகள் சோனியா கூறுகையில், “எனது தந்தையை சில இயக்குநர்கள் திட்டமிட்டு வெளியேற்றி விட்டார்கள். அப்போது அவருக்கு உதவாமல் ஒதுங்கியிருந்த நடிகர் சங்கம், இப்போது திலீப் விவகாரத்தில் உதவி செய்கிறது. அவர் மன்னிப்புக் கேட்கக்கூடத் தயாராக இருந்தார். அவருக்கு நடிகர் சங்கம் உதவியிருக்குமானால் மன அழுத்தம் ஏற்பட்டு மரணம் அடைந்திருக்க மாட்டார்’’ என்றார். மேலும் பல மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் நடிகைகளுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க ‘அம்மா’வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான நடிகைகள் ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் கூட்டுமாறு சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதம், வுமன் இன் சினிமா கலெக்டிவ் பேஸ் புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக இருப்போம் என்று சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. பாலியல் குற்றவாளி என கருதப்பட்டவருக்கு இப்போது சங்கம் ஆதரவு தெரிவிப்பது, ஏற்கெனவே எடுத்த முடிவுக்கு எதிரானது இல்லையா? கடந்த கூட்டம் நடந்தபோது ஊரில் இல்லாததால் நாங்கள் வரமுடியவில்லை. எனவே, கேரளத்துக்கு வெளியே உள்ள நாங்கள், கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக, வரும் ஜூலை 13 அல்லது 14ம் தேதியில் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.