பிரியங்காவின் ஐந்து கெட் அப்!

பிரியங்கா சோப்ரா சல்மான் கானோடு இணைந்து நடிக்கும் பாரத் படத்தில் ஐந்து விதமான தோற்றங்களில் வலம் வரவுள்ளார்.


இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தீபிகா படுகோனும் பிரியங்கா சோப்ராவும் முன்னணி இடத்தில் உள்ளனர். பாரத் படத்திற்காக 12 கோடி ரூபாயைப் பிரியங்கா சம்பளமாகப் பெறவுள்ளார் என்பதை ஏற்கனவே மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம். பிரியங்கா சம்பளம் ஏதும் பெறாமல் தனது நண்பரான அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் படத்தில் நடிப்பதாக நேற்று மாலையில் இருந்து ஒரு செய்தி பரவியது. இதைப் படக்குழு தற்போது மறுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு வெளியான ‘ஒடி டு மை ஃபாதர்’ என்ற தென் கொரியத் திரைப்படத்தை தழுவியே ‘பாரத்’ திரைப்படம் உருவாகிவருகிறது. சல்மான் கான் மூன்றாவது முறையாக அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதுல் அக்னிகோத்ரி, அல்விரா கான் இணைந்து தயாரிக்கின்றனர். இரு கதாநாயகிகளில் ஒருவராக திஷா பதானியும் நடிக்கிறார்.

ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட்டில் நடிக்கிறார். 1947ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை கதை பயணிப்பதால் 28 வயதில் இருந்து 60 வயது வரை ஐந்து விதமான தோற்றங்களில் பிரியங்கா நடிக்கிறார். பழம்பெரும் நடிகைகளின் தோற்றத்தை உள்வாங்கி கதாபாத்திரங்களின் தோற்றம் படைக்கப்படும். பத்து ஆண்டுகளுக்குப் பின் சல்மான் கானும் பிரியங்காவும் இணைந்து இதில் நடிக்கின்றனர்.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஆறு மாத காலத்தில் நிறைவடையும். இதற்கு முந்தைய சல்மான் கானின் படங்களைப் போலவே இந்தப்படத்தையும் ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது 
Powered by Blogger.