தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊழல்!

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தனது கட்சி சார்ந்தவர்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்கி வருகின்றார் என
வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கனகரெத்தினம் கமலநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரிடம் என்னால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மகஜர்கள் கூட வழங்கப்பட்டன. ஆனால் இவ்விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

தற்போது சபை உறுப்பினர்களின் சிபாரிசின் அடிப்படையில் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் தவிசாளர் தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு மாத்திரம் உதவி வழங்கி வருகின்றார்.

எமது கட்சியின் சில உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சியின் சில உறுப்பினர்கள் இணைந்து வீதிகளுக்கு மின் விளக்குகள் பொறுத்துவதற்கு கடிதம் வழங்கியிருந்தனர், ஆனால் இது தொடர்பில் தவிசாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் கட்சி சார்ந்தவர்களின் பகுதிக்கு மாத்திரம் சேவை செய்து வருகின்றார்.

பதவி ஏற்றதும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக சேவையை செய்வதாக கூறிய தவிசாளர் தற்போது தனது கட்சி சார்ந்து செயற்படுவது வேதனை அளிக்கின்றது. ஒரு தவிசாளர் தனது கட்சி சார்ந்து சேவை செய்வதும், அத்தோடு கட்சி ரீதியாக சபையை செயற்படுத்துவதும் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபையை ஒரு முன்னுதாரணமாக நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டிய தவிசாளர் அதனை கட்சி வழி நடத்தலின் கீழ் கொண்டு செல்கின்றார்.

சபை அமர்வில் ஏதும் பிரேரணை கொண்டு வந்தாலோ அல்லது தேவைகளை நடைமுறைப்படுத்துவதாக இருந்தாலோ கட்சி தலைமை சொல்வதை கேட்டே செயற்படுகின்றார்.

இவ்வாறு கட்சி சார்ந்து செயற்படுவது வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை ஏமாற்றும் செயலாகவே கருதப்படுகின்றது. ஆகவே வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கட்சி சார்ந்து செயற்படாது மக்கள் நலன் சார்ந்து ஏனைய சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் தேவைகளை நிறைவேற்றும் முகமாக செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு தவிசாளர் சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகள் சீரின்மை காரணமாக ஒரு நபர் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தி வருகின்றார். இந்த நிலைமை இன்னும் தொடராமல் இருப்பதற்கு வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையடி சபைக்குட்பட்ட வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.