ஆஸ்கர் குழுவில் இந்தியர்கள்!

இந்தியாவைச் சேர்ந்த இருபது திரைப்பிரபலங்கள் ஆஸ்கர்
விருதின் தேர்வுக்குழுவுக்கு (Academy of Motion Picture Arts and Sciences) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்கர் விருதுக்குப் படங்களை தேர்ந்தெடுப்பதில் பன்முகத் தன்மை இருக்க வேண்டி உலகின் அனைத்து எல்லைகளில் இருந்தும் திரைப்பிரபலங்கள் குழுவில் இடம்பெற வேண்டும் என்பதில் ஆஸ்கர் அகாடமி முனைப்பு காட்டி வருகிறது.
2015ஆம் ஆண்டு 322பேர் அங்கம் வகித்த நிலையில், 2016ஆம் ஆண்டு 683ஆக அதன் எண்ணிக்கை உயர்ந்தது. இந்த ஆண்டு 59 நாடுகளில் இருந்து 928பேர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
நடிகர்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஷாருக் கான், மதாபி முகர்ஜி, சௌமித்ரா சட்டர்ஜி, நஸ்ருதின் ஷா, மாதுரி தீட்சித், அலி ஃபாஸல், அனில் கபூர், தபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ஆதித்யா சோப்ரா, குனித் மொங்கா என இரு தயாரிப்பாளர்களும் பட்டியலில் இணைந்துள்ளனர்.
பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அனில் மேத்தா, ஆடைவடிவமைப்புக் கலைஞர் டோலி அலுவாலியாவும் இந்த முறை தேர்வுக்குழுவுக்குத் தேர்வாகியுள்ளனர்.
ப்ரொடக்‌ஷன் டிசைனர்களான சுப்ரதா சக்ரபோர்டியும், அமித் ராயும் அங்கம் வகிக்கவுள்ளனர். படத்தொகுப்பாளர் பிரிவில் தங்கல், ஜோதா அக்பர் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பாலு சலுஜா மட்டும் தேர்வாகியுள்ளார்.
இசையமைப்பாளர்கள் பிரிவில் உஷா கண்ணாவும், ஸ்னேகா கான்வால்க்கரும் இடம்பெற்றுள்ளனர்.
இயக்குநர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், மிர்னாள் சென், கௌதம் கோஷ், சூனி டரபோரவலா ஆகியோர் ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டு அழைப்புவிடுக்கப்பட்ட அனைவரும் தேர்வுக்குழுவில் இணைந்து செயலாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பதில் 49 சதவீதம் பெண் உறுப்பினர்கள் ஆவர்.

Powered by Blogger.