சாதனை நாயகனுக்கு உற்சாக வரவேற்பு!

செஸ் போட்டியில் 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்று
சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 26) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இத்தாலியில் இருந்து சென்னை வந்த அவரை பெற்றோர் மற்றும் சக மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா பேசுகையில், "தரவரிசைப் புள்ளிகளை மேலும் உயர்த்தி முன்னணி வீரர்களுடன் விளையாட முயற்சி செய்வேன். சூப்பர் கிராண்ட் மாஸ்டர் ஆவதே தன்னுடைய அடுத்து இலக்கு. விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் ஆகிய ஜாம்பவான்களுடன் விளையாட விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நாளை மறுதினம் (ஜூன் 28) தனது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரக்ஞானந்தா, “3 வயது முதல் செஸ் விளையாடுகிறேன். என் அக்காவும் செஸ் வீராங்கனைதான். 5 வயது முதல் போட்டித் தொடர்களில் பங்கேற்கிறேன். அடுத்து, தரவரிசைப் புள்ளிகளை உயர்த்த வேண்டும்” என்று கூறினார். மேலும், அவர் எவ்வாறு வெற்றி பெற்றீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “எனக்கு தெரியாது, நான் எந்தவித பதட்டமும் இல்லாமல் எப்பொழுதும் போலதான் விளையாடி பட்டத்தை வென்றேன். நிறைய வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
இதுப்பற்றி பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமியை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அவன் சிறு வயது முதலே ஜாலியாக விளையாடுவான். இந்த வெற்றி ஒருவரால் மட்டும் சாத்தியம் ஆகவில்லை. நிறைய பேரின் ஆதரவும் இருந்ததால் மட்டுமே சாத்தியமானது. இனி, அவன் தரவரிசைப் புள்ளிகளை உயர்த்த வேண்டும். எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது” என்று பெருமையாகக் கூறினார்.
Powered by Blogger.