பொ.மு., பொ.பி.யில் அரசியல் தலையீடு இல்லை!

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் கி.மு., கி.பி என்று
குறிப்பிடுவதற்குப் பதிலாக, பொ.மு., பொ.பி. என்று கூறியிருப்பதில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார் தமிழக அமைச்சர் பாண்டியராஜன்.
சிலம்புச்செல்வர் என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படும் ம.பொ.சிவஞானத்தின் 113வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 26) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சி.யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பாண்டியராஜன். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ம.பொ.சி. என்று புகழ்ந்தார். “கப்பலோட்டிய தமிழனையும் வீரபாண்டிய கட்டபொம்மனையும் நம் முன்னால் உலவவிடுவதற்கு, அவர் எழுதியுள்ள புத்தகங்களே அடிப்படைக் காரணம். சிலப்பதிகாரத்தை எத்தனை நோக்கில் பார்க்க முடியுமோ, அத்தனை நோக்கில் பார்த்துத் தமிழர்களின் மனதில் சிறந்த காப்பியமாகத் திகழ அடித்தளம் வகுத்தவர் ம.பொ.சி.” என்று பேசினார்.
ம.பொ.சி.யின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவது மற்றும் அவருக்கு மணி மண்டபம் கட்டுவது பற்றி முடிவெடுக்க வேண்டுமென அமைச்சர் பாண்டியராஜனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனைப் பரிசீலித்து, விரைவில் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல உள்ளதாக, அவர் உறுதியளித்தார்.
இதன்பின், தமிழகப் பாடத்திட்டத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறந்த பின் என்பதற்குப் பதிலாக பொது ஆண்டுக்கு முன் மற்றும் பொது ஆண்டுக்குப் பின் என்று பயன்படுத்தப்படுவது குறித்து விளக்கமளித்தார் பாண்டியராஜன்.
“மிகச்சிறந்த வல்லுநர் குழுதான் பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம் பற்றி முடிவெடுத்துள்ளது. அது மாற்றியமைக்கப்பட்டது பற்றி, இதுவரை எந்தவித எதிர்ப்பும் வரவில்லை. அவ்வாறு வரும்பட்சத்தில் வல்லுநர் குழு நல்ல முடிவை எடுக்கும். கிறிஸ்துவின் பெயர் வரக்கூடாது என்ற எண்ணம், இதற்குக் காரணம் கிடையாது. பொது ஆண்டு என்பது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டுமென்று அவர்கள் முடிவெடுத்துள்ளனர். பெரியளவில் எதிர்ப்பு ஏதும் வரவில்லை. அப்படி வந்தால், அதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இதுசார்ந்து சரியான முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.
பாடத்திட்டத்தைச் சீரமைப்பதில் பாஜகவின் தாக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பாண்டியராஜன், இதில் எந்த அரசியல் நோக்கும் இருப்பதாகக் கருதவில்லை என்று தெரிவித்தார். “அந்தக் குழுவில் இருந்த அறிஞர்கள் அனைவருமே அரசியல் கலப்பில்லாதவர்கள். அதனால், கண்டிப்பாக அந்தக் குற்றச்சாட்டில் உண்மை கிடையாது” என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.