வவுனியாவில் மலையக வம்சாவளி ஆதரவாக ஆர்ப்பாட்டம்!

மலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராகவும், காணி உரிமை வழங்கக் கோரியும் வவுனியாவில் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.


வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்பு என்பன இணைந்து இன்று (திங்கட்கிழமை) இக் கண்டனப் பேரணியை மேற்கொண்டன.

வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பித்த பேரணி பசார் வீதி வழியாக பிரதேச செயலகம் வரை சென்றது.

மலையக வம்சாவளி மக்களை இழிவுபடுத்தும் முகமாக பார்த்தீபன் என்பவர் துண்டுபிரசுரங்களை ஒட்டியமைக்கு எதிராகவும், மலையக மக்கள் வசிக்கும் ஓமந்தை, மகிழங்குளம் பகுதி மக்களுக்கான காணி உரிமை வழங்கப்படாமையைக் கண்டித்தும் அம் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

இந்திய வம்சாவளி மக்களாகிய நாமும் ஒரு தேசிய இனம். எம்மை இழிவுபடுத்திப் புறக்கணித்து பல இடங்களிலும் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது.

எம்மை இழிவுபடுத்துபவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எமக்கான காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்க வேண்டும் எனவும் இதன்போது அம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகத்திற்குள் சென்று உதவி மாவட்ட செயலாளர் கமலதாசன் அவர்களிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்ததுடன் பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களிடமும் மகஜர் ஒன்றினை கையளித்தனர். 
Powered by Blogger.