துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் மறு கூராய்வு!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் மறு உடற்கூராய்வு 100 சதவீதம் வீடியோ பதிவு செய்யப்படுவதால் இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.


தூத்துக்குடியில் காவலாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் 7 பேரின் உடல்கள் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி ஆட்சியர் பிரசாந்த், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மருத்துவக்கல்லூரி டீன் லலிதா மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் 7 பேரின் உடல்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மறு உடற்கூராய்வு நடத்தப்பட்டது.

குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் முன்னிலையில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், 2 தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழு உடற்கூராய்வு செய்தது. இதில் செல்வசேகர் (42), சண்முகம் (38), கார்த்திக் (20) ஆகியோரது உடல்கள் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காளியப்பன் (22), கந்தையா (58) ஆகியோரின் உடல்கள் இன்று (அதாவது நேற்று) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மறு உடற்கூராய்வு செய்த இரண்டு பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.

உடற்கூராய்வு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடக்கிறது. 100 சதவீதம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை.

மீதமுள்ள ஆறு பேரின் உடல்கள் நீதிமன்ற உத்தரவின்படி பரிசோதனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2½ கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது" என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.