ஒன்ராறியோவின் ஆட்சி மாற்றத்துக்கான அறை கூவல் !

மீண்டும் எங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போட வேண்டுமாயின் வாக்களிப்போம் லிபரலுக்கே….!


சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக நமது மாகாணத்தை ஆட்சிக்குட்படுத்தி ஊழலுக்குப் பேர் எடுத்த அரசாக வளர்ந்திருக்கின்றது இந்த லிபரல் அரசு. நம் உழைப்பில இருந்து வரிப்பணமாக எடுத்து, தங்களுக்கு தேவையானவர்களை வளர்‌த்தெடுத்திருக்கின்றது. இந்த அரசு செய்த சில ஊழல்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் ஊடாக நாம் தேர்தலில் சரியானவவர்களை தேர்வு செய்யலாம்.

கையும் மெய்யுமாக பிடிப்பட்டஒரு சில முக்கிய ஊழல்களை பற்றி சற்றே அறிந்துகொள்வோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள்.

அகதிகளாக இந்த நாட்டில் கால் பதித்தவர்கள் நாம். எங்கள் பெற்றோர்கள் 2-3 வேலைகள் செய்தே அன்றாட வாழ்க்கையை ஓட்டியவர்கள்.
300 சதுர அடி வீட்டில் வாழ்க்கை ஓட்டி, தமிழ் பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படியாவது படிப்பித்துவிட வேண்டும் கடினமாக உழைத்தவர்கள்.

எல்லா வேலைகளையும் செய்தார்கள். செய்கின்றார்கள். உழைக்கின்றார்கள்.

மொழி தெரியாத நாட்டில் நம்மை இந்த கனேடிய ஓட்டத்தில் இணைத்துக்கொள்ள நம் இனம் பட்ட இன்னல்கள் சொல்லில் அடங்காது

இரண்டாம் தலைமுறையில் பெரும்பானவர்கள் பொறியியல் சார்பான கணினித் துறைகளில் பட்டம் பெற்று வேலை செய்யத் தொடங்கினார்கள்.

அந்தோ பரிதாபம்…அதுவே வேலைகளை வேறு நாடுகளுக்கு அனுப்பியதில் (outsourcing) இல் பாதிக்கப்பட்ட துறையாகவும் போனது.

ஆரம்ப சந்ததிகளுக்கு பல தொழில்வாய்ப்புக்கள் “கனேடிய அனுபவம்” இல்லை என்று மறுக்கப்பட்டிருந்தது. பின்னால், கனடாவில் கல்வி கற்ற அவர்களின் பிள்ளைகளும், கனடாவிலே வேலை அனுபவங்கள் பெற்றிருந்தும், வேலைகள் இல்லாத சூழ்நிலைக்குள்ளே வந்தார்கள்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணமானது வேலைவாய்ப்புக்கள்.

எமக்குள்ளே பலர் 20-30 வருடங்களாக தொழில் செய்த நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தொழில் இழப்பு மட்டுமல்ல அன்றாட பொருட்களின் விலைகள் உயர்ச்சி, வாழ்வதற்கு கூட வீடு வாங்க முடியாத நிலையினை கட்டுக்கடங்காத கள்ள பணம் உள்ளே வந்து வீடுகளின் பெறுமதியினை கூட்டுகின்றது.

பணவீக்கம் உள்ள பொருளாதாரம் நம் அனைவரின் வளர்ச்சியினை தடுத்து நிறுத்துகின்றது. எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், உழைப்பவர்களின் வாழ்வு நாசமாக்கப்படுகின்றது.

பொருளாதார வளர்ச்சி என்பது எல்லா வகையான உழைப்பாளிகளின் பங்களிப்புக்களி‌லே தங்கியிருக்கின்றது.
குறுகிய பணத்தினால் உருவாக்கம் பெற்ற பணக்கார முதலைகள் இந்த உழைப்பாளிகளை கண்டுகொள்வதில்லை. மதிப்பதில்லை. இந்த பண முதலைகளே லிபரலோடு இருக்கின்றார்கள். இருப்பார்கள்.
வெளியே சொர்க்க பூமியினை நமக்காக உருவாக்குவதாக தேர்தலில் அறிக்கை தந்துவிட்டு, தங்களுக்கும் தங்களுக்கானவர்களுக்கும் சொர்க்கத்தை தாங்களே உருவாக்கி வாழ்வார்கள்.

நம்மில் 95 வீதமானவர்கள் மிகவும் கடினமாக உழைக்கின்றார்கள். அவர்களின் வாழ்வியல் வெளியே தெரிவதில்லை.

அன்றாடம் தமிழர்களாகிய நாம் இந்த கனேடிய நீரோட்டத்தில் பங்கெடுத்து கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இதர மக்களுக்கு இருக்கும் ஆசைகள், துன்பங்கள், தேவைகள் அனைத்தும் நமக்கும் உண்டு. சக கனேடியர்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் நமக்கும் உண்டு. ஆனாலும்இ நம்மை ‘இரண்டாம்’ தர பிரதிசைகளாகவே வைத்துப் பார்க்க ஆசைப்படுகின்றார்கள் சில கட்சிகளில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள்.

கனேடிய அரசியலுக்குள்ளே கால் பதிக்கும் சில தமிழர்கள், எங்கள் உழைப்பை வரியாக அறுவடை செய்ய ஆசை கொள்ளும் கட்சிகளோடு தங்களை ஈடுபடுத்துவதன் ஊடாக, தங்களுடைய தனி அரசியல் எதிர்காலத்துக்காக, அடையாள அரசியலை (Identity Politics ) உருவாக்கிக் கொண்டு நகர்த்துகின்றார்கள். அவர்களின் கணிப்பில் நாம் பெட்டியடிக்கப்பட்ட ஒரு குழு. வாக்கு வேட்டை இயந்திரம் மட்டுமே.

நாம் தமிழர்களாக இருந்தாலும், ஒன்ராறியர்களாக, கனேடியர்களாக சிந்திக்கவும் செயற்படவும் நமக்கு 100 வீதம் உரிமையிருந்தாலும், இந்த தளபதிகள் நம்மை குண்டு சட்டியில் குதிரை ஓடுமாறு கட்டளையிடுகின்றார்கள். மற்றவர்கள் மாதிரி நமக்கும் இங்கே பாதிப்புக்கள் இருந்தாலும் நாங்கள் தமிழர்களாகவே நின்று கதைக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள். இந்த காரணமாகவே நம்மை இதர மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்களோ தெரியவில்லை. தங்களுடைய தேவைகளுக்காக எம்மை “குழுக்களாக” பிரித்து வைத்து அரசியல் இலாபம் தேடுதலே அவர்களின் நோக்கம்.

நாங்கள் கனேடிய மண்ணில் படும் இன்னல்களை பற்றி அக்கறையடைவது தேவையற்றது என்பதே இவர்களின் புதைந்திருக்கும் ‘பிரித்து’ வைத்து அரசியல் செய்யும் சாணக்கியத்தின் நோக்கம்.

பொருட்களின் விலை உயர்வு, மின்சாரக் கட்டணத்தின் உயர்வு, ‌வேலையின்மை….
இத்தனை பிரச்சனைகளுக்கும் நாமும் முகம் கொடுக்கின்றோம். அனுபவிக்கின்றோம். எனினும் நாம் “கனேடியர்களாக” சிந்திக்கவோ, செயற்படவோ முடியாது என்கின்ற அடிப்படையிலே இவர்கள் தமிழ் அடையாள அரசியலை கனேடிய மண்ணில் கொண்டு செல்கின்றார்கள். அவர்களின் பிழைப்புவாதம் மட்டுமே அது. தங்கள் வாக்கு வங்கியினை தக்கவைக்கவும் தமிழ் மட்டும் அல்ல பின் இதர குழுக்களையும் உருவாக்கிக்கொள்வார்கள். குழுக்களாக பிரித்து வைப்பதினூடாக குறிப்பிட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்க்கின்றார்கள்.

இந்த லிபரல் அரசின் சில ஊழல்களைப் பற்றி சற்றே பின்நோக்கிப்பார்ப்போம்.

ஒன்ராறியோவின் மின்சக்தி ஆலை ஊழல் (Ontario Power Plant Scandal)

2011 ஒன்ராறியோ தேர்தலுக்கான பரப்புரையில், Mississauga இலும் Oakvilleஇல் கட்டப்படவிருந்த மின் உற்பத்திசெய்யும் நிலையங்களை மூடிவிடுவதாக தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்படுகின்றது. இரண்டு பிரதேசங்களிலும், சூழல் பாதுகாப்பு விரும்பிகளினால் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களில் உருவாக்கிய அழுத்தங்கள் மூலம் இந்த முடிவை சந்திக்கின்றது லிபரல் அரசு. இரண்டு இடங்களை எப்பாடு பட்டாலும் தக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கின்றது. இரண்டு இடங்களையும் தக்கவைத்தது என்பதே செய்தி.

Dalton McGuinty தலை‌மையிலான அரசு 53 இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வருகின்றது. கொன்சவேற்றிவ் 37 இடங்களையும், புதிய சனநாயக கட்சி 17 இடங்களையும் 2011 தேர்தலில் பெற்றுக்கொள்கின்றது. 18 இடங்களை இழந்து லிபரல் அரசு ஒரு சிறுபான்மை அரசாக ஆட்சியமைக்கின்றது.

இந்த மின் உற்பத்தி செய்யும் நிலையங்களை கட்டும் திட்டத்தை இரத்துச் செய்ய லிபரல் அரசு 230 மில்லியன் டொலர்கள் முடியும் என்று நமக்கு வாக்குறுதியினை தருகின்றார்கள். 190 மில்லியன் டொலர்கள் Mississaugaதிட்டத்தை இரத்து செய்ய, Oakville திட்டத்தை இரத்து செய்ய 40 மில்லியன்‌ டொலர்கள் எனக் கணக்கு காட்டப்படுகின்றது.

ஆனால், நடந்தது என்ன?

ஒன்ராறியோவின் தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையின் படி இந்த இரத்து செய்யும் திட்டங்களுக்கு சுமார் 1.1 பில்லியன் (1,100 மில்லியன்) முடியும் என்று முழுமையான கணக்கறிக்கை ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

2011 தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த லிபரல் அரசு பெரும்பான்மையற்றிருந்ததால், கட்சிக்கான கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்த ஊழல் விவகாரம் வெளியே கொண்டுவரப்படுகின்றது. அன்று எதிர்க்கட்சியாக இருந்த கொன்சவேற்றிவ் கட்சியும் கடுமையாக இவற்றை தோண்டியெடுக்க காரணமானது.

இந்த ஊழல் காரணமாக McGuinty அவர்கள் தன் பதவியில் இருந்து இறங்குவதாக அறிவிக்கின்றார். இந்த இரத்து செய்யும் திட்டங்களுக்கு பின்னால் பெரும் ஊழல் நடந்திருக்கலாம் என்பதை மக்கள் சிந்திக்கத்தொடங்கினார்கள். வரும் முன்னே தப்புதல் சிறப்பு என்பதே லிபரல் கட்சியின் ஒரு அணுகுமுறையாக இருந்து வந்திருக்கின்றது. நீண்ட நாள் லிபரல் ஆட்சியில் மந்திரியாக இருந்த திரு Michael Chan (MPP for Markham-Unionville),தான் இந்த தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று அறிக்கை கொடுத்ததற்கும் அந்த அணுகுமுறைதான் காரணம்.

எதிர்க்கட்சியாக இருந்த கொன்சவேற்றிவ் கட்சி தொடர்ச்சியாக “இரத்து செய்யும்” திட்டம் சார்பான அனைத்து ஆவணங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அழுத்தத்தை கொடுக்கின்றது. பல இமெயில்களில் இருந்த ஆவணங்களை தாங்கள் அழித்துவிட்டதாக லிபரல் அரசு சொல்கின்றது. அரசாங்க ஆவணங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாக லிபரல் கட்சியினர் இருக்கவில்லை என்பதை இது திடமாக கோடிட்டு காட்டிநின்றது.

ஒக்டோபர் – 2012 இல் McGuinty அவர்கள் பதவியில் இருந்து ஒதுங்கப்போவதாக அறிக்கைவிட்டு பாராளுமன்றத்தை பெப்பிரவரி 2013 வரை முடக்கிவிடுவதாக அறிவிக்கின்றார். இந்த இடைக்காலத்தில் லிபரல் இன்னுமொரு கட்சித்தலைவரை தேர்ந்தெடுக்கவே இந்த நடவடிக்கையை அவர் செய்கின்றார்.

ஜனவரி 2013 இல் லிபரல் கட்சி Kathleen Wynne அவர்களை தேர்ந்தெடுக்கின்றது.

McGuinty க்கு மிகவும் நெருக்கமானவர்களான Livingston உம் Millerஅவர்களும் கணினியில் இருந்த hard drives ஐ அழித்துவிட்டார்கள். பெப்ரவரி 2013 இல் McGuinty அவர்கள் பதவியில் இருந்து இறங்கப்போவதாக அறிவிக்கச் சற்று முன்னால் இந்த நடவடிக்கையை அவர்கள் செய்திருந்தார்கள். அதுவே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை மணி கொடுத்தது.

ஆனாலும், அழிக்கப்பட்ட இமெயில்கள் திரும்பவும் மீட்டெடுக்கப்பட்டு, ஊழல்களுக்கான சாட்சியங்களாக அவை பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டன.

2018 ஜனவரி மாதம் கனேடிய நீதிமன்றம் குற்றவாளிகளாக இந்த இருவரையும் அறிவித்து தீர்ப்பு அளிக்கின்றது.. லிபரல் ஆட்சிக்குட்பட்ட இந்த ஊழல் பல ஊழல்களுக்கு சாட்சியாகவும் மக்களின் பணத்தை சுரண்டும் வர்க்கத்தின் ஒரு அங்கமாகவும் லிபரல் இருப்பது கண்கூடாக தெரிவதற்க்கு உதவியது.

2014 ஒன்ராறியோ தேர்தலில் இந்த ஊழல் குற்றச்சாட்டினால் தோல்வியினை எதிர்பார்த்திருந்தது கட்சி, கொன்சவேற்றிவ் கட்சியின் அன்றைய தலைவர், 100,000 ‌பொதுப்பணித் தொழிலாளர்களை வேலையினை விட்டு அகற்றப் போவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்ததின் பலனாக, புதிய சனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் லிபரலுக்கு வாக்கை செலுத்தி லிபரல் அரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள். கொன்சவேற்றிவ் கட்சி தமக்குத் தாமே குழியினை வெட்டிக்கொண்டார்கள்.

இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி 58 இடங்களையும், கொன்சவேற்றிவ் கட்சி 28 இடங்களையும், புதிய சனநாயக கட்சி 21 இடங்களையும் பெற்றன.

Kathleen Wynne தலைமையின் கீழ் நடந்த சில நடவடிக்கைகள்

ஒன்ராறியோ கையிற்ரோ (Hydro One) தனியாருக்கான விற்பனை..

ஒன்ராறியோவில் என்றுமில்லாதவாறு மின்சாரக் கட்டணம் உயர்ந்துகொண்டிருக்கின்றது. அதற்கான காரணத்தில் ஒன்று அரசு உடமையாக இருக்கவேண்டிய மின்சார வாரியத்தின் ஒரு பங்கு தனியாருக்கு விற்கப்பட்டது. மின்சார உயர்வினால் பொது மக்கள் மட்டும் அல்ல சிறிய வியாபார நிறுவனங்கள், விவசாயத் துறை இதர பல துறைகளும் பெரும் சவால்களைச் சந்திக்கின்றன. இந்த மாகாணத்தை விட்டு பல நிறுவனங்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அதன் ஊடாக வேலைவாய்ப்புக்களை இழந்துகொண்டிருக்கின்றோம்.

ஒன்ராறியோவில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றார்கள். ஏற்கனவே பொருள் விலை உயர்வு காரணமாக தண்டிக்கப்பட்டவர்கள் இந்த மின்சார உயர்வினால் தங்கள் விவசாய உற்பத்திகளை ஒட்டுமொத்தமாக கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

தங்கள் கட்சியின் நிதியறிக்கையினை சமப்படுத்துவற்காக, தனியாரிடம் மின்சார வாரியத்தை விற்றதின் ஊடாக ஒன்ராறியர்களாகிய எங்களின் மின்சார கட்டணம் உயர்ந்துகொண்டே செல்லப்போகின்றது.
இதனூடாக ஏற்படப்போகும் இதர தீமைகளையும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டிய நேரம் இது. சிறிய கால நன்மைக்காக நீண்ட துன்பத்தை அனுபவிக்கப்போகின்றோம்.

நாளை இவர்கள் எங்கள் பாடசாலைகளையும், ஆஸ்பத்திரிகளையும் தனியாருக்கு விற்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் உண்டு?

இன்று கட்டணம் செலுத்தப்பட்டு பயணிக்கும் 407 நெடுஞ்சாலை போன்றே நம் மின்சாரக் கட்டணமும் எந்த கட்டுப்பாடுகளின்றி உயர்ந்துகொண்டே செல்லும்.

கடந்த கிழமை Hydro One இயக்குநர் குழாமில் இருப்பவர்களுக்கு அதுவும் பகுதிநேரமாக வேலைசெய்பவர்களுக்கு வருடாந்த சம்பளமான $160,000 இல் இருந்து $185,000 அதிகரித்திருக்கின்றார்கள். இயங்குநர் சபையின் தலைவருக்கான சம்பளம் $260,000 இல் இருந்து $330,000 க்கு கூட்டப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கை என்பது மின்சார சபையினை தனியாருக்கு ஒரு பகுதியினை கொடுத்தின் விளைவாகவே நடந்தது. எங்களிடம் இருந்தே இந்த பணம் அறவிடப்படப்போகின்றது. நானும் நீங்களுமே இவர்களை மாதிரி தெரியாதவர்களுக்கு எல்லாம் உழைத்துக்கொடுக்கப்போகின்றோம்.

நாளை என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. தனியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பொது நிறுவனம் அமெரிக்காவின் உள்ள இன்னுமொரு தனியார் நிறுவனத்தையும் வாங்கியிருக்கின்றது. தனியார் மயப்படுத்தப்பட்ட காரணத்தால், அங்கே வேலை செய்பவர்களுக்கான சம்பளத்தை அடிக்கடி உயர்த்துவார்கள். உங்கள் மின்சாரக் கட்டணத்தை அடிக்கடி உயர்த்துவதின் ஊடாகவே அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

ஒன்ராறியோவின் வேலைவாய்ப்பு இழப்பு

பல தொழில் வாய்ப்புக்கள் இழந்துகொண்டு வருகின்றோம். தேர்தலுக்காக லிபரல் செய்துகொண்டிருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தினை ஏற்றும் முயற்சிகள் ( Minimum wage) காரணமாக சிறு வியாபார நிறுவனங்கள் தங்கள் ‌வியாபாரத்தை மூடுகின்றார்கள். பல பெரிய வியாபார நிறுவனங்கள் காசாளர்கள் இல்லாத கணினிகளை உள்வாங்கி, தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புகின்றார்கள்.

வியாபார நிறுவனங்களில் அறவிடப்படும் வரியினை அதிகரித்துக்கொண்டு வருவதால் அவர்களிடம் இருக்கும் ‌தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. அதனால், வியாபார நிறுவனங்கள் ஒன்ராறியோவை விட்டு வெளியே செல்கின்றன.
முக்கியமாக சிறு வியாபாரிகளை மிகவும் கடினமான வாழ்வியலுக்குள்ளே இந்த அரசு உட்படுத்தியிருக்கின்றது. அவர்களினால், தங்களை தக்கவைக்க முடியாது போகின்றபோது ஒரேயடியாக வியாபார நிறுவனங்களை இழுத்து மூடுகின்றார்கள்.

கார்பன் வரி – carbon tax

லிபரல் அரசு முடிந்தவரை எல்லாவற்றுக்கும் வரி கொண்டு வந்தால் மட்டுமே அவர்களின் கட்டுக்கடங்காத செலவுகளுக்கு பயன்படுத்தமுடியும். அந்த காரணம் ஒன்றாகவே அவர்கள் இப்போது புது வரியொன்றினை கொண்டுவருவதற்க்கு முயற்சிக்கின்றார்கள்.

சூழல் மாசு அடைதல். நாம் பயன்படுத்தும் எரிவாயுகளினால் உருவாக்கப்படுவதே கார்பன். அதற்கான தண்டையாகவே இந்த வரியினை அரசாங்கம் கொண்டு வருவதற்கு துடிக்கின்றது. இதர வழிமுறைகளை ஆராயாமல், ஏற்கனவே எங்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணத்தை வைத்து வீண் விரயம் செய்துகொண்டு இன்னும் ஒரு வரியினை எங்களிடம் எதற்காக அறவிடத் துடிக்கின்றார்கள் என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ளமுடியும். உண்மையாகவே கார்பன் வரி மூலம் பெறப்படும் பணத்தை உண்மையாக சூழலைப் பாதுகாக்கும் பணிக்கு செலவு செய்வார்களா இந்த லிபரல் கட்சி என்பதை அவர்களின் ஆட்சியில் வேறு விடயங்களுக்கு செலவு செய்திருக்கும் திட்டங்களைப் பார்க்கின்றபோது நமக்கு புலப்படும்.

என்ன செய்ய வேண்டும் நாம்?

நாம் நமது ஆன்மாவை லிபரலுக்கே கொடுத்துவிட வேண்டும் என்று நம்மிடம் பரப்புரை செய்பவர்கள் அந்தக் கட்சிக்கான அரசியல்வாதிகளும், அதனூடாக நிதிப்பெற்றுக்கொண்டிருக்கும் அமைப்புகளுமே.

அவர்கள் பொதுமக்களாகிய நாம் படுகின்ற இன்னல்களை கண்டும் காணாதது போல் இருப்பார்கள். இன்றும் இந்த ஊழல் கட்சிக்கு விசுவாசமாக இருப்பது அவர்கள் திருந்தப்போவதில்லை என்பதனையே காட்டுகின்றது. எங்கள் மீது உண்மையாகவே அக்கறையிருக்குமாயின் இந்த ஊழல் அரசினை விட்டு வெளியே வந்திருப்பார்கள். இன்றும் அவர்களோடிருந்து பரப்புரை செய்வது என்பது இன்னும் சுரண்டல்களுக்கு வழி தேடும் உத்தியேயன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?

ஆனால், பொதுமக்களாகிய நாம் கனேடியர்களாக சிந்திக்கவும் செயற்படவும் வாக்களிக்கவும் முடியும். நாம் ஏதோ லிபரலுக்கு காலம் பூராகவும் அடிமையாகவே இருக்கவேண்டும் என்ற அவர்களின் பரப்புரையை நாம் செவிமடுக்கத் தேவையில்லை.

உண்மை நிலை உணர்வோம். நாம் சரியாக சிந்திக்கத் தவறி, வேறு வெல்லமுடியாத கட்சி ஒன்றுக்கு வாக்களிப்பதன் ஊடாகவும் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மறைமுகமாக உதவி செய்தவர்களாகிவிடுவோம். மறந்து விடாதீர்கள், மீண்டும் லிபரல் ஆட்சிக்கு வருகின்ற போது அது இன்னும் பெரும் ஊழல் பெருச்சாளியாகவே உருவாகும். இத்தனை ஊழல்களையும் செய்தும் மக்கள் தங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்றால் இன்னும் அவர்களுக்கு ஆணவம் கூடும்.

மின் ஆலைகளை மூடுவதில் செய்த ஊழலுக்கு பிறகு கூட லிபரலை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் எங்கள் மின்சார வாரியத்தை விற்பனைக்கு விட்டார்கள். இப்போ, திரும்பவும் தேர்ந்தெடுத்தால் என்னத்தை விற்பார்களோ தெரியாது… ஆகையினால், இந்த 10 வருட ஊழல் ஆட்சிக்கு சாவுமணி அடிப்போம்.

எங்கள் மாகாணத்தை ஆட்சி செய்யும் லிபரலுக்கு வருமானம் வருவதில் பிரச்சனையில்லை. அவர்கள் செய்யும் செலவுகளில் தான் பிரச்சனையிருக்கின்றது. ஆகையினால்இ நாமும்ஒன்ராறியர்களாக கனேடியர்களாக சிந்திக்கவும் செயற்படவும் சரியான நேரம் வந்திருக்கின்றது.

ஜூன் மாதம் 07 திகதி சரியான முடிவெடுத்து இந்த ஊழல் ஆட்சியினை அகற்றுவோம். லிபரல் செய்த ஊழல்களை பரப்புரை செய்வோம். மக்களை விழிப்படைய வைப்போம்.

Raj Subramaniam

Markham, Ontario

Iniyaval@gmail.com

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.