திரைப்படமாகும் எம்.ஆர்.ராதா வாழ்க்கை!

நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்குகிறார், அவரின் பேரனும், இயக்குநருமான ஐக்.


திரையுலகில் ஒரு படம் வெற்றியடைந்தால், அதே பாணியில் திரைக்கதை அமைத்து அது போன்றே படங்கள் வருவது புதிதல்ல. அந்த வகையில் தற்போது வாழ்க்கை வரலாறு படங்கள் காலம். நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையப்படுத்தி நடிகையர் திலகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்போது நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது பேரன் ஐக் ராதா ஒரு படம் இயக்கவுள்ளார். இந்தத் தகவலை ஐக் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் எம்.ஆர். ராதா தனது நடிப்புப் பயணத்தை நாடகத் துறையில் தொடங்கினார். 1937ஆம் ஆண்டு வெளியான ராஜசேகரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி 1979ஆம் ஆண்டு பஞ்சாமிர்தம் வரை திரைப்படங்களில் நடித்திருந்தார். சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான். இவரது ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அவரது படங்களைப் பார்த்து வியந்து அதன் காட்சிகளை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

இது போன்ற பல பெருமைகள் கொண்ட எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக உருவாகுவது சிறப்பான ஒன்று. அதை அவரது பேரன் இயக்கும்போது இன்னும் கூடுதல் சிறப்பு. இவர் இதற்கு முன் நடிகர் ஜீவாவை வைத்து சங்கிலி புங்கிலி கதவை திற என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.