எட்டு வழிச்சாலை: கடவுளிடம் மனு!

பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு எதிராக சேலம் குள்ளம்பட்டியில் கடவுளிடம் மனு கொடுத்து வழிபட்ட மக்கள், பசுமை வழிச்சாலை கமிஷனுக்காக போடப்படுவதாக குற்றம் சாட்டினர்.


சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை அமைப்பதை எதிர்த்து, மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இன்று (ஜூன் 27) குள்ளம்பட்டியில் விவசாயிகள் நிலங்களில் இறங்கி அழுது புரண்டு தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மேலும் குள்ளம்பட்டி பெரியாண்டிச்சி அம்மனிடம் மனு கொடுத்து, மக்கள் வழிபாடு நடத்தினர். அந்த மனுவில், பசுமை வழிச்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். மக்கள் வழிப்பட்டு கொண்டிருந்த போது வழிபாடு நடத்திய கோயில் பூசாரிக்கு சாமி வந்தது, அப்போது அவர் “இந்த ரோடு கமிஷனுக்காக போடப்படுகிறது, நான் முதல்வர் எடப்பாடியை தண்டிப்பேன்” என்றார்.

தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், நிலம் அளக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இருவர் காவல் துறையினர் முன்பாகவே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அப்போது காவல் துறையினர் அவர்கள் இருவரையும் உயிருடன் மீட்டனர். அதனைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினர் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதால் இளங்கோ என்ற விவசாயி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். தீக்குளிப்பதைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியானது பரபரப்பாக காணப்பட்டது.
Powered by Blogger.