ஆபத்தான கட்டத்தை தாண்டிய குஷல் பெரேரா!

பார்படாஸ் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்
போட்டியின் போது நெஞ்சில் பலத்த காயமடைந்த இலங்கை அணி வீரர் குஷல் பெரேரா, ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது பழைய நிலைக்குத் திரும்பி வருவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் - இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை வீரர் குஷல் பெரேரா எல்லைக் கோட்டருகே ஃபீல்டு செய்து கொண்டிருந்தார். 29ஆவது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த அணியின் வீரர் அடித்த பந்து பெரேராவை நோக்கி வந்தது.
அதனைப் பிடிக்க முயற்சித்த அவர், நிலை தடுமாறி பவுண்டரி அருகே உள்ள பலகையில் மோதி நெஞ்சில் பலத்த காயமடைந்தார். உடனயாக ஆம்புலன்ஸின் உதவியுடன் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேனின் முடிவில் பெரேரா ஆபத்தான கட்டத்தை தாண்டி, தற்போது பழைய நிலைக்குத் திரும்பி வருவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
குஷல் பெரேரா ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார். அவர் நாளை விளையாடுவாரா இல்லையா என்பதை நாளை தான் தீர்மானிக்க முடியும் என்று இலங்கை அணியின் மேலாளர் அஷங்கா குருசிங்கா கூறியுதாக நேற்றிரவு இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கிய இலங்கை அணியில் குஷல் பெரேராவுக்கு பதில் தனுஷ்கா குணதிலகா, மஹேலா உடாவட்டே துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இன்று நடைபெறவுள்ள நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் வெற்றிக்கு 63 ரன்களும்; தொடரை வெல்ல மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 5 விக்கெட்டுகளும்தேவைப்படுகின்றன.
Powered by Blogger.