மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


குறித்த கூட்டம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், பிரதி அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலிசாகீர் மௌலானா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மாவட்டச் செயலாளர் மா.உதயகுமாரின் வழிநடத்தலின் கீழ் நடத்தப்பட்ட கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலை தொடர்பில் ஆராயும் வகையில் மூன்று பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, புல்லுமலையில் அமைக்கப்படும் குறித்த தொழிற்சாலை தொடர்பில் உரிய பகுதியினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படாமலும் பிரதேச, மாவட்ட அபிவிருத்திக்குழுக்கள் கூட்டத்தில் அனுமதி பெறப்படாமலும் அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் இங்கு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசபையின் தவிசாளரிடம் அபிவிருத்திக்குழு வினவியபோது, தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் பேரின்பராஜா தங்களிடம் கட்டடத்திற்கான அனுமதி கோரியபோது அதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்ததன் காரணமாக அனுமதி வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அதிகாரிகள் மக்கள் நலன் தொடர்பில் அக்கரையின்றி செயற்படுவதற்கு புல்லுமலை குடிநீர்போத்தல் தொழிற்சாலை நல்ல உதாரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேசசபையினால் கித்துள், உறுகாமம், புல்லுமலை உட்பட பல பிரதேசசபைகளில் காலம் காலமாக பிளாஸ்டிக் நீர்த்தாங்கிகளை வைத்தே நீர் வழங்கி வருகின்றது.

இந்த நீர்ப்போத்தல் தொழிற்சாலை இனரீதியாகவோ, மத ரீதியாகவோ பார்க்ககூடாது. அப்பகுதியில் உள்ள மூன்று இன மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலையின் நடவடிக்கைகளை மீளாய்வுசெய்ய வேண்டும், அதற்கான அனுமதியை ரத்துச்செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வலியுறுத்தினர்.

இது தொடர்பில் குழுவொன்றினை நியமனம் செய்து ஆய்வுசெய்து குறித்த தொழிற்சாலை தொடர்பில் முடிவுகளை மேற்கொள்வோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.


அதற்கு அமைவாக மூன்று பேர் கொண்ட குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட முகாமையாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.