எனது குரலை ஒடுக்க முடியாது : பிரகாஷ் ராஜ்!

எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தால் எனது குரல் மேலும் வலுவடையும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று (ஜுன் 27) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி கர்நாடகாவின் பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக நவீன் குமார் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அமித் தெக்வெக்கர், பரசுராம் வாக்மாரே உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

விசாரணையின் போது குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அடுத்து கொலை செய்யப்படவுள்ள நபர்களின் பெயர்கள் இருந்துள்ளன. அதில் நடிகர் கிரிஷ் கர்நாட், நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட சில எழுத்தாளர்களின் பெயர்களும் இருந்துள்ளது.

கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தார். சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் எதிராகச் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.

தற்போது, முற்போக்கு பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளிகளின் டைரியில் அடுத்த இலக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் இருப்பதாகச் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

"ஆபரேஷன் காகா" என்ற பெயரில் தன்னைக் கொல்ல திட்டமிட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து, பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கௌரி லங்கேஷை கொலை செய்தவர்கள் நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம்.

என்னுடைய குரலை ஒடுக்கும் வகையிலான மிரட்டல் இது. இப்படி மிரட்டல்கள் வரும்போது, என் குரல் மேலும் வலிமைபெறும். கோழைகளே, நீங்கள் இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப்போகிறோம் என நினைத்துப்பார்க்கிறீர்களா” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான நவீன் குமாருக்கு இன்று (ஜுன் 28) உண்மை கண்டறியும் சோதனை நடைபெறவுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.