மெஸ்ஸி மட்டுமா... ஒட்டுமொத்த அர்ஜென்டினாவும் துள்ளியெழவேண்டும்!

பல முன்னணி அணிகள் `எலிமினேஷனு'க்கு மிக நெருக்கமாக
இருக்கின்றன. இன்று மூன்றாவது சுற்று தொடங்கும் நிலையில், ஒவ்வோர் அணியின் தலையெழுத்து என்னவென்பதையும் யாராலும் யூகிக்க முடியாத நிலை. இதுதான் உலகக் கோப்பையில் அனைவரும் எதிர்பார்ப்பது. அடுத்தடுத்த போட்டிகள் இன்னும் பல மடங்கு பரபரப்பை ஏற்படுத்தப்போகின்றன.

அர்ஜென்டினா - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம், கடந்த வாரத்தின் மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே களத்தில் அர்ஜென்டீன வீரர்கள் தடுமாறுவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. முன்களம், தடுப்பாட்டம் என இரண்டு ஏரியாவிலும் குரோஷியா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளில் விளையாடும் ரகிடிச், மோட்ரிச் கூட்டணி மொத்த ஆட்டத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதுதான் ஆட்டத்தின் முடிவையும் தீர்மாணித்தது.


முன்னணி வீரர்களையெல்லாம் பெஞ்சில் அமர்த்தியதன் விளைவை அர்ஜென்டினா நன்றாக அனுபவித்துவிட்டது. மற்ற அணிகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்களோ என்று தோன்றுகிறது. அர்ஜென்டினா மட்டுமல்ல, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் என முன்னணி அணிகள் அனைத்தும் தங்களின் 100 சதவிகிதத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. இந்தத் தொடரை வெற்றியோடு தொடங்கியிருக்கும் பிரான்ஸ், உருகுவே போன்ற அணிகளுக்கும் அதே நிலைதான். பெல்ஜியம், இங்கிலாந்து, ரஷ்யா விளையாடிய போட்டிகள் தவிர்த்து, எந்தப் போட்டியின் முடிவும் பெரிய கோல் வித்தியாசத்தால் நிர்ணயிக்கப்படவில்லை.

எல்லாப் போட்டிகளும் 1-0, 2-1 என மிகவும் குறுகிய வித்தியாசத்தில்தான் முடிவாகின்றன. ஜெர்மனி ஸ்வீடனுக்கு எதிராகப் பெற்ற வெற்றி, பிரான்ஸின் வெற்றிகள், ஸ்பெயின் இரானிடம் பெற்றது என எல்லாமே 90 நிமிடமும் போராடி கிடைத்த வெற்றிகள். சொல்லப்போனால் இந்தச் சுற்றுகள் பெரிய அணிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியை அடித்திருக்கின்றன. அவர்கள் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது. இன்னும் அதே கேம் பிளானோடு விளையாடினால் இந்த உலகக் கோப்பை இன்னும் நிறைய அதிர்ச்சிகளைப் பார்க்கவேண்டியிருக்கும்.இந்தக் கடைசிச் சுற்றில் ஸ்பெயின் - போர்ச்சுகல் போட்டியைப் போல் இன்னொரு போட்டியைப் பார்க்கவேண்டும். லீக் சுற்றின் முதல் வாரத்திலேயே ஒர் அரையிறுதியைப் போன்ற போட்டியைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இரண்டு அணிகளும் மாற்றி மாற்றி கோல் போஸ்டை முற்றுகையிட்டுக்கொண்டே இருந்ததைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ரொனால்டோவின் ஆட்டம்!

33 வயதில் அவரிடம் அப்படியோர் ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு சிறப்பாக விளையாடினார். ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தினார். தன் வீரர்களிடம் தொடர்ந்து உரையாடினார், ஊக்கப்படுத்தினார். லயோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினாவின் கேப்டனாக இதையெல்லாம்தான் செய்யத் தவறிவிட்டார். அவரை இப்படியொரு நிலையில் பார்ப்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது. அந்த பெனால்டியைத் தவறவிட்டதாலும், அதைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களாலும் அவர் தன்னையே இழந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. 
Powered by Blogger.