முதன்முறை சல்மான் கானைப் பார்த்த ஷாருக்!

நடிகர் ஷாருக் கான் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ஜீரோ திரைப்படத்தின் டீசர், படம் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தி திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஷாருக் கான். இவர் தற்போது ஜீரோ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். தனு வெட்ஸ் மனு, அம்பிகாபதி ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் ஷா ருக் கானுடன் அனுஷ்கா ஷர்மா, கேத்ரினா நடித்துவருகிறார்கள். சல்மான் கான் மற்றும் கஜோல் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர்களோடு தீபிகா படுகோன், ஆலியா பட், ஸ்ரீதேவி, கரீஷ்மா கபூர், ராணி முகர்ஜி ஆகியோரும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்கள். ஜீரோ படம் முழுக்க முழுக்க ஒரு ரொமான்டிக் ஸ்டோரியாக உருவாகிவருகிறது.

இப்படத்தில் ஷாருக்கை மூன்றடி உயரமுள்ள மனிதனாக மாற்ற அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் டீசர் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகியுள்ளது. நடன அரங்கில் பிரபலமான ஒருவருக்கு அறிமுக உரை கொடுக்கப்பட்டிருக்கும்போது அது தனக்குத்தான் என ஷாருக்கான் நினைத்துக்கொண்டு நடந்துவருகிறார். அதற்குப் பின்தான் தெரிந்தது உயரக்குறைபாடுள்ள ஷாருக் கானுக்குப் பின்னால் ஒரு உயரமான ஆளுமையாக ஒருவர் நின்று கொண்டிருக்கிறார் என்று. அவர் சல்மான் கான் என அறிவிக்கப்படுகிறது. அதை வெகுளியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் ஷாருக் கானுடன் இணைந்து கைகோர்த்து நடனமாடும் காட்சிகளை மிகவும் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.

இது போன்ற அம்சங்கள் கொண்ட ஜீரோ படத்தின் டீசர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது திரைப் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து பெரும் எதிர்பார்ப்போடு இருப்பதாகக் கூறி படக் குழுவினருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

ஜீரோ படம் 2018 டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை வெளியீடாக வரவுள்ளது. முன்னதாக, இப்படத்துக்கு கேத்ரீனா மேரி ஜான் எனப் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.