457 பேருக்கு தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இந்த நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளன.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கிவைத்துள்ளார்.

வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றும் 676 பேருக்கு ஆசரியர் நியமனம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் 182 பேருக்கு கடந்த மார்ச் மாதம் நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மீதமுள்ள 494 தொண்டராசிரியர்களில் 457 பேர் மாத்திரமே தமது தகைமைகளை நிறைவு செய்த நிலையில் அவர்களுக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் வடமாகாண பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக இதுவரை கடமையாற்றிய 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டதுடன், நான்கு தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.