அமெரிக்காவில் 4 வயது சிறுவன் தவறுதலாக சுட்டதில் குழந்தை பலி

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது.
அங்கு துப்பாக்கிச்சூடுகளில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்து 971 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 381 பேர் குழந்தைகள்.

இந்த நிலையில் அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பதற வைப்பதாக அமைந்து உள்ளது.

அங்கு உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன் ஒருவனிடம் கைத்துப்பாக்கி கிடைத்தது. அதை வைத்து அவன் விளையாடிக்கொண்டு இருந்தபோது தவறுதலாக விசையை அழுத்தி சுட்டு விட்டான். அதில் குண்டு பாய்ந்து 2 வயதே ஆன ஒரு பெண் குழந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்தது. அந்தக் குழந்தை, அவனது நெருங்கிய உறவுக்குழந்தை.

குண்டுபாய்ந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்தது.

அந்த வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்து அந்த நகர ஷெரீப் விசாரணை நடத்தினார்.

அத்துடன் 4 வயது சிறுவன் கையில் கிடைக்கிற அளவுக்கு துப்பாக்கியை கவனக்குறைவாக கைக்கு எட்டும் இடத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அவனது தாத்தா சீசர் லோபெஸ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.