ஆனந்தம் தரும் அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோவில்

“பணம் வந்ததும் குணம் மாறிவிட்டது” “நீ முன்பு போல இல்லை.. மாறிவிட்டாய்” என்ற வார்த்தைகளை கட்டாயம் நாம் எங்கேனும்
ஒரு முறையேனும் பயன்படுத்தியிருப்போம். நம்மை அறியாமல் நமக்குள்ளே ஏற்படும் ஆணவம், கர்வம், செருக்கு. அதை சரியான நேரத்தில் உணர்ந்து சரிசெய்தால் அறிந்தால் வாழ்க்கை நலமாகும். “எல்லாம் உனது செயலே” என்றிருப்பவர்களுக்குக் கூட இச்சூழல் வரும். அந்த நிலையில் யார் காப்பாற்றுவார்? யார் கொடுப்பார்? தெரிந்துகொள்வோம்.

விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார். அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின்னர் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அதனால் பிரம்மன் 'நான்முகன்’ என்றழைக்கப்பட்டார். பிரம்ம தேவனுக்கு 'சதுரானன்’ என்ற பெயரும் உண்டு. மேலும், பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர், பெரியவர் என்றும் ஆத்மபூ= தான் தோன்றி என்றும், அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன் எனவும், நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன் போன்ற பெயர்களும் உண்டு.

தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி மற்றும் மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார். சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரஸர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர். அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன் என சிருஷ்டி தொடர்ந்தது. - இது, தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பிரம்மனின் தோற்றம் பற்றிய புராணக் கதை.

'பிரம்மதேவன்’ ஒரு ஸ்வயம்பூ. அதாவது, தானாகத் தோன்றிய தெய்வம் என்பதே அந்த உண்மை. அவர் அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை ஆற்றல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் மொத்த உருவம். அவர் மூலம் ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, அது லட்சமாகி, கோடியாகும். பிரம்ம சிருஷ்டி ஒவ்வொரு விநாடியும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

இந்தியாவில் எல்லாப் பெரிய கோவில்களிலும் பிரம்மா இருக்கிறார். ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் இடத்திலும் பூஜிக்கப்படுகிறார். தென் கிழக்காசிய நாடுகள் முழுவதும் குறிப்பாக கம்போடியா, இந்தோனேசியாவில் நிறைய சிலைகள் உள்ளன. சில நாடுகளில் இவர் ‘’ஸ்வேதோவித்’’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். வெள்ளை நிறத்தவர் என்ற பொருளும் உண்டு. எகிப்தில் ‘’பிதா’’ என்ற பெயரில் பிரம்மா இருக்கிறார்

ஆனந்தம் தொடரும் ......

தீவிர பக்தர் - மின்னஞ்சல் polesorient@gmail.com 
Powered by Blogger.