இதோ வர்றோம்... ஃபைனலில் குரேஷியா!

ஃபிபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதியில் குரேஷியா அணி இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தியுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா அணியைப் பொறுத்தவரை லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0 வென்றது. அதற்கு பின்னர் பலம் மிக்க அணியான அர்ஜென்டினாவை 3-0 என வீழ்த்தி மொத்த உலகையும் திரும்பிப்பார்க்க வைத்தது. பின்னர் ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 எனவும் காலிறுதியில் ரஷ்யாவை 4-3 எனவும் பெனால்டி ஷூட்டில் வென்றது. மொத்தத்தில் அந்த அணி தோல்வியையே சந்திக்காமல் அரை இறுதி வரை வந்துள்ளது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ள குரேஷியா அணிக்கு அரை இறுதியில் விளையாடுவது இது இரண்டாவது முறை.
குரேஷியா-இங்கிலாந்து
இங்கிலாந்தைப் பொறுத்தவரை அந்த அணி சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பையைக் கைப்பற்றிய முன்னாள் சாம்பியன் அணி. இந்த உலகக் கோப்பையில் அனுபவம் இல்லாத அணியாகப் பார்க்கப்படும் இங்கிலாந்து, ஜி பிரிவில் இடம்பெற்றிருந்தது. லீக் சுற்றில் 3 இல் 2 வெற்றி, 1இல் தோல்வியைப் பெற்றது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட் அவுட்டில் கொலம்பியாவையும் கால் இறுதியில் 2-0 என ஸ்வீடனையும் வென்றது. அரை இறுதிக்கு வந்த இந்த அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது.
இறுதிப் போட்டிக்குச் செல்லவிருப்பது யார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டி எனும் காரணத்தால் பரபரப்புடன் தொடங்கியது போட்டி. ஆட்டம் தொடங்கிய 5ஆவது நிமிடத்திலேயே வேலையைக் காட்ட ஆரம்பித்தது இங்கிலாந்து அணி. அந்த அணியின் ட்ரிப்பருக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதனை கச்சிதமாகப் பயன்படுத்தி கோல் போட்டார். குரேஷியா வீரர்கள் அத்தனை பேர் நிற்க அவர்களை தாண்டி சீறிக்கொண்டு சென்ற அந்த பந்து கோல் கீப்பரின் கைகளில்கூட படாமல் தலைக்கு மேலே சென்று சூப்பரான கோல் ஆக மாறியது. இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
அதைச் சமன் செய்ய குரேஷியா வீரர்கள் கடுமையாகப் போராடினர். இதற்கிடையே இங்கிலாந்து வீரர் லிங்கார்டுக்கு கோல் அடிக்க அருமையானதொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனைத் தவறவிட்டார். அத்துடன் முதல் பாதி ஆட்டம் முடிந்தது. முதல் பாதியின் முடிவில், இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில், குரோஷியா வீரர் ஆன்டே ரெபிக்குக்கும் இங்கிலாந்து வீரர் கைல் வாக்கருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆக்ரோஷமாகச் சென்றுகொண்டிருந்த ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் குரேஷியாவிற்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை இங்கிலாந்து வீரர்கள் தடுத்து மடை மாற்றினர். 68ஆவது நிமிடத்தில் குரேஷியாவுக்கு கோல் அடிக்க வாய்ப்பு வந்தது. இந்தமுறை இங்கிலாந்தால் அதைத் தடுக்க முடியவில்லை. குரேஷியாவின் இவான் பெரிசிக் இந்த கோலை அடித்தார். மரியோ மாண்ட்ஸுகிக் தூரத்திலிருந்து அடித்த பந்தை இங்கிலாந்து வீரர் தடுக்க ஓடி வர, கண் இமைக்கும் நேரத்தில் அவரது தலைக்கு மேலே தாவி இவான் பெரிசிக் வலைக்குள் தள்ளிவிட அந்த கோல் வந்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. அதன் பிறகு போட்டி குரேஷியாவின் பக்கம் சென்றது.
அந்த 30 நிமிடங்கள்

குரேஷிய அணி வீரர்கள் அதன் பிறகு முழுமையாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இரண்டாம் பாதி ஆட்டம் 1-1 என ஆனதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணியும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் 30 நிமிடம் கொண்ட எக்ஸ்டிரா டைம் வழங்கப்பட்டது.அதில், கார்னர் கிக் மூலம் வந்த பந்தை இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ் கோலாக்க முயல குரேஷியா வீரர்கள் அதைத் திறம்படத் தடுத்தனர். அத்துடன் கூடுதல் நேரத்தின் முதல் பாதி ஆட்டம் முடிந்து இரண்டாம் பாதி தொடங்கியது.
போட்டியை நிர்ணயிக்கும் கடைசி 15 நிமிடங்கள் இதுதான் எனும் காரணத்தால் இரு அணிகளுமே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டன. போட்டியின் கடைசி நேரத்தில் குரேஷியாவும் இங்கிலாந்தும் மாறி மாறி அடித்த பந்தை குரேஷியா வீரர் தலையால் முட்டி மேலே எழுப்ப அந்தப் பந்து குரேஷியாவின் மாண்ட்ஸுகிக்குக்கு வந்தது. அதை அவர் லாவகமாக வலைக்குள் அடித்து கோல் ஆக்கினார். இதனால் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது. அதன் பின்னர் எந்த அணியுமே கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணியை 2-1 என வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்றது குரேஷியா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.