அப்போலோவில் இன்று ஆய்வு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனையில் இன்று (ஜூலை 29) ஆய்வு நடத்தவுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணைத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆணையத்தின் பதவிக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 65 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் ஆணையம் இன்று (ஜூலை 29) ஆய்வு நடத்தவுள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வார்டு, எக்மோ கருவி பொருத்தப்பட்ட அறை, ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்ட அறை, சசிகலா மற்றும் அரசு மருத்துவர்கள் குழு தங்கியிருந்த அறை, உணவு தயாரிக்கப்பட்ட அறை போன்ற இடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இரவு 7 மணி முதல் 7.40 வரை ஆய்வு நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையைப் பார்க்க வேண்டும் என ஜெ.தீபா தரப்பில் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆய்வு முடிந்த பிறகு இரவு 8.15 மணி முதல் 8.40 மணி வரை ஜெ.தீபா மற்றும் அவரது வழக்கறிஞர் சுப்பிரமணி ஆகியோர் பார்வையிட உள்ளனர்.

அப்போலோ தரப்பு வக்கீல்கள் மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் எந்தவித விவாதமும் மேற்கொள்ளக் கூடாது. மருத்துவமனை நிர்வாகத்துக்கும், நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் பார்வையிட வேண்டும் என ஜெ.தீபா தரப்புக்குக் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.