பழிதீர்த்தது வங்கதேசம்!

மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்த வங்கதேசம், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் நேற்று (ஜூலை 28) நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு தமிம் இக்பாலின் சதமும் (103 ரன்கள்), மஹ்மதுல்லாவின் அரைசதமும் (67 ரன்கள்), அந்த அணிக்கு 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்களைப் பெற்றுத் தந்தது.தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களான கிறிஸ் கெய்ல் (73 ரன்கள்), சாய் ஹோப் (64 ரன்கள்), ஹெட்மெர் (30 ரன்கள்) ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கிய போதிலும், ஃபினிஷர்கள் ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணியால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோவ்மன் பவல் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.டெஸ்ட் தொடரில் வங்கதேசம், முறையே இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்திலும், 166 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளானது. தற்போது இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.