ரஞ்சித் இயக்கத்தில் ஆஷாவுக்கு ‘புது’ ரோல்!

ரஞ்சித் இயக்கும் மோகன்லாலின் புதிய படத்தில் ஆஷா ஷரத், மோகன்லாலுக்கு மனைவியாக நடிக்கிறார்.

மலையாள முன்னணி இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் டிராமா. அருந்ததி நாக், கனிகா, சித்திக், நிரஞ்ச்,மைதிலி, ஷாலின் ஸோயா, டினி டாம், பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் திலீஸ் போத்தன், ஷைமா பிரசாத், ஜானி அந்தோணி போன்ற இயக்குநர்களும் இதில் நடிக்கின்றனர். வினு தாமஸ் இசையமைக்கிறார்.

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் பற்றிய கதை எனச் சொல்லப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஃபேமிலி என்டர்டைனர் படமான இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடிகை ஆஷா ஷரத் நடிக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படத்தில் அதிரடி போலீஸாக வந்து மிரட்டியவர் ஆஷா ஷரத்.

அந்தப் படத்தில் இருவரது கதாபாத்திரங்களுக்கு இடையே காரசாரமான மோதல் இருந்தது. அவரது நடிப்பால் அப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும்கூட அவரேதான் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மோகன்லாலுக்கு மனைவியாகவே இந்தப் படத்தில் நடிப்பதால் இருவருக்குமான கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதைக் காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். விரைவில் படப்பிடிப்பு முடிவடைவதால் ஓணம் பண்டிகைக்கு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.