துணி பைகளைப் பயன்படுத்துங்கள்: நீதிபதி செல்வம்!

பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, துணி பைகளைப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி செல்வம் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையிலும் நேற்று (ஜூலை 28) சிறப்பு தூய்மைப்பணி முகாம் நடந்தது. இந்த முகாமை நீதிபதி செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பசீர் அகமது, சுந்தர், நிஷாபானு, கிருஷ்ணவள்ளி, சுரேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், முதன்மை நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையர் பழனிசாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேல், சித்திரைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி செல்வம், "மதுரைக் கிளை வளாகத்தைப் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வளாகமாக அறிவித்தது மட்டுமில்லாமல், அதைக் கடைப்பிடித்து வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் சுற்றுசக்சூழலைப் பாதுகாக்கும் வகையில் துணி பைகளைப் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கைக் கருத்தில்கொண்டு, அதன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இயற்கை வளங்களை நாம் மதித்தால்தான் இயற்கை நம்மை மதிக்கும்" எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.