முதலமைசர் விக்னேஸ்வரன் கைது செய்யுமாறு கோரிக்கை!

வடமாகாண முதலமைசர் விக்னேஸ்வரன் கைது செய்யுமாறு முன்னாள் இலங்கை இராணுவத்தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா கோரியுள்ளார்.


கிளிநொச்சியில் புதிதாக குழந்தைகளை பிரசவித்த தமிழ் தாய்மார்களின் தகவல்களை சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் விடுத்த உத்தரவிற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள அவர் தேசிய பாதுகாப்பிற்காகவே இராணுவத்தினர் இவ்வாறான புலனாய்வுத் தரவுகளை திரட்டி வருவதாகவும் கூறியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, வட மாகாண முதலமைச்சரை உடனடியாக கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்கான புதிய கட்டடம் யூலை 12-ஆம் திகதியான நேற்றைய தினம் வியாழக்கிழமை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வட மாகாணச சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆட்சியே நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியதுடன், புதிதாக சிசுக்களை பிரசவித்த தாய்மார்களின் விபரங்களையும் படையினர் சேகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டார்.

வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் முறைப்பாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் தனது அனுமதியில்லாமல் எந்தவொரு தரவுகளையும் இராணுவத்தினருக்கு வழங்க வேண்டாம் என அரச பணியாளர்களுக்கு பகிரங்கமாக அறிவுறுத்தினார்.

வட மாகாண முதலமைச்சரின் இந்த உத்தரவு சிங்கள ஊடகங்களிலும், தென்பகுதி அரசியல் களத்திலும் பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் இராணுவத் தளபதியும் நல்லாட்சி அரசாங்கத்தின் வன இலாக மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

இராணுவத்திற்கென புலனாய்வுப் பிரிவொன்று இருக்கின்றது. அதற்கு மேலதிகமாக தேசிய புலனாய்வுப் பிரிவொன்றும் உள்ளது. மக்களுடன் தொடர்புகளை பேணுவதன் ஊடாகவே அவர்கள் தகவல்களைத் திரட்டுகின்றனர். இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமாகும். இதற்கெதிராக ஒருவர் செயற்படுவாராக இருந்தால் அவர் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக செயற்படுபவராகவே கருதப்படுவார்.

அதனால் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமாயின் கைது செய்ய வேண்டும். ஏனைய நாடுகளிலும் இதேபோல ஒருவர் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக செயற்பட்டால் கைது செய்து அதிகபட்ச தண்டனையை வழங்குவார்கள்.

அப்படிப்பட்ட சட்ட நடவடிக்கை ஒன்று அவருக்கு எதிராகவும் எடுக்க வேண்டும். சாதாரண மக்களின் அன்றாட செயற்பாடுகள் எமக்கு அவசியமில்லை. ஆனால் அவர் கூறியமைக்கான காரணமானது, பயங்கரவாத அல்லது சட்டவிரோத விடயங்கள் சார்ந்த தகவல்களையே வழங்க வேண்டாம் எனக் கூறியிருப்பதாக அர்த்தப்படுகிறது.

எனவே மறைமுகமாக அவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக உத்தரவுகளை வழங்கினால் அவரை முதலமைச்சராக கருதமுடியாது. நாட்டின் சாதாரண பிரஜையாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சட்டம் சமமானதாகும். நிச்சயமாக அவருக்கு எதிராக இன,மத பேதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காததன் விளைவினாலேயே எமக்கு கடந்த காலத்தில் பாரிய விபரீதங்களுக்கு முகங்கொக்க நேரிட்டது. எனவே இவ்வாறான நிலைமைகளில் தைரியமான தீர்மானத்தை எடுத்து செயற்பட நாட்டின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.