ஈழத்தமிழ் இளைஞர் அவுஸ்திரேலியாலிருந்து நாளை நாடு கடத்தப்படவுள்ளனர்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் நாளை திங்கட்கிழமை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளார்.


அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி தஞ்சகோரிக்கையுடன் வந்தடைந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்ரம்பரில் மகள் ஒருவர் பிறந்துள்ளார்.

எனினும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் விலாவுட் தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திலீபன் இதுநாள் வரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த கிழமை இவரது மனைவிக்கும் மகளுக்கு ஐந்து வருட தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இவரது பலவந்தமான நாடுகடத்தல் அதிர்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றபோதும், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பாராமுகமாக இருப்பதாக தமிழ் அகதிகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை பலவந்தமான நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு விலாவுட் தடுப்புமுகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.