தமிழர்களின் இருப்பை அழிக்கும் கூட்டமைப்பின் முயற்சிகளை முறியடித்துள்ளோம்!

எங்கள் அரசியல் பயணத்தை ஆரம்பித்து இன்று எட்டு ஆண்டுகளை எட்டியுள்ளோம். இந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து தயாரித்து அதனைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து தமிழ்மக்கள் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பை நடாத்தி எங்கள் மக்களின் ஆணையைப் பெறுவதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்த முயற்சிகளை நாங்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளோம்.

இதன் மூலம் தமிழ்மக்களை நிரந்தரமாக அதள பாதாளத்திற்குள் தள்ளி இந்தத் தீவில் தமிழர்களின் இருப்பை நிரந்தரமாக அழிக்கும் வகையிலான தமிழர்களின் அடிமை சாசனத்தை நாங்கள் இல்லாமல் செய்துள்ளதாம்.

இதற்குத் தமிழ்மக்கள் பேரவையும் எங்களுக்குப் பக்கபலமாகவிருந்துள்ளது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பேரினவாதிகளால் கடந்த-1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவு கூரும் கறுப்பு யூலை நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை(23) பிற்பகல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.கொக்குவில் சபாபதிப்பிள்ளை வீதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த-30 ஆண்டுகளாகத் தமிழர்களின் தேசத்தை வென்றெடுப்பபதற்காக மிக உக்கிரமானதொரு போராட்டம் வடக்கு- கிழக்கில் நடைபெற்றது. ஆனால், அந்தப் போராட்டத்திலுள்ள நியாயங்களைத் தெரிந்து கொண்டாலும் கூடத் தங்களுடைய பூகோள அரசியல் நலனுக்காக உலகநாடுகள் இலங்கை அரசுக்கு முழுவளவு ஒத்துழைப்பை வழங்கி இனவழிப்பு மூலமாகத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எங்கள் தேசத்து மக்களின் இருப்பை, பொருளாதாரத்தை, கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எமது தேசத்துக்கான அங்கீகாரம் பெறும் எங்கள் அரசியல் பயணம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

கடந்த-2009 ஆம் ஆண்டில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மிகவும் கொடூரமான முறையில் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் அந்தப் போராட்டத்தினை ஆதரித்தவர்கள் அல்லது ஆதரித்தார்கள் எனச் சந்தேகத்துக்குள்ளானவர்கள் அல்லது எதுவுமே செய்யாதவர்கள் கூட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரச படைகளாலும், இவர்களுடன் சேர்ந்தியங்கிய துணை ஆயுதக் குழுக்களாலும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவ்வாறான கொடூர செயற்பாடுகள் குறைந்தது 50 ஆண்டுகளுக்கேனும் தமிழர்களின் மனதில் விடுதலை பற்றிய சிந்தனை, சுதந்திர உணர்வு வரக் கூடாது என்ற மரண பயத்தை ஏற்படுத்துபவனாகவிருந்தன.

அதேபோன்று வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் எஞ்சியுள்ளவர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கு விடுதலை, சுதந்திர உணர்வு போன்ற எண்ணங்கள் வரக் கூடாது எனும் அளவிற்கு ஒரு மரண பயத்தை ஏற்படுத்தும் விதமாக மிகவும் கொடூரமான வழிகளைக் கையாண்டு இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நடாத்தி முடித்தது. ஆனால், அந்த அரசு கண்ட கனவுகளை நாங்கள் ஒரு ஆண்டேனும் நீடிக்க விடவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நான், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய நாங்கள் மூவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்து இனவழிப்பு யுத்தம் நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து உடனடியாகவே எங்கள் கொள்கைகளைக் கைவிடக் கூடாதென சம்பந்தனுடன் நாங்கள் எவ்வளவோ வாதிட்டோம்.

ஆனால்,சம்பந்தன் போரழிவுகளைப் பயன்படுத்தி தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற நிலைப்பாடுகளைக் கைவிடச் செய்து எங்களை ஒற்றையாட்சிக்குள் கொண்டு செல்வதற்கானதொரு முயற்சியில் ஈடுபட்டார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு சட்டத்தரணியாகத் தனக்கிருந்த அனுபவங்களையும்,அறிவையும், பூகோள அரசியலை விளங்கிக் கொண்டதன் அடிப்படையிலும் நாங்கள் இந்த நிலைப்பாடுகளைக் கைவிடக் கூடாதென்ற முடிவை உறுதியாக முன்வைத்த போது அவருடன் நாங்கள் இரண்டு பேர் தான் உடனிருந்தோம்.

எங்கள் 22 பேரில் நாங்கள் மூன்றுபேர் மாத்திரம் தனித்துப் போக மீதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தனுடன் நின்றிருந்தாலும் கூட எங்கள் தேச விடுதலைக்காய் உயிர் கொடுத்த மாவீரர்களையும், போராட்டத்தில் தங்கள் உயிர்களைக் கொடுத்த மக்களையும் மனதில் நிறுத்திக் கொண்டு எங்கள் தேசத்தின் இருப்புக்காக நாங்கள் செய்யக் கூடிய காரியம் தேசிய உணர்வுகளை, தமிழ்த்தேசம் சார்ந்த உரிமைகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கு எங்களலான காரியங்களை மேற்கொள்வதே வழி என முடிவெடுத்தோம்.

அந்த அடிப்படையில் தான் நாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம். பின்னர் சமூகத்திலுள்ள முற்போக்கானவர்களை எங்களுடன் இணைத்துக் கொண்டோம். இவ்வாறு இணைத்துக் கொண்டவர்களில் மணிவண்ணன், வரதராஜன் சேர் போன்றவர்கள் முக்கியமானவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.