விஜய்யை அழைக்கும் கமல்!

பிரபலங்கள் மக்களோடு உரையாட ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மிகவும் எளிதாக உள்ள நிலையில் நேற்று (ஜூன் 30) கமல் மக்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் மூலமாகப் பதிலளித்துள்ளார்.


செய்தியாளர்களின் கேள்விகளை விட மக்களின் கேள்விகள் மிக காத்திரமாக மேற்பூச்சு இல்லாமல் நேரடியாகக் கேட்கப்படுகின்றன என்பதைக் கமலின் ட்விட்டர் உரையாடலின் மூலம் அறிந்து கொள்ளலாம். கமலும் அதைச் சரியாக எதிர்கொண்டு பதிலளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்களோடு உரையாட முடியும் என்று கமல் சொல்லியிருந்தாலும் அதை விட அருமையான உரையாடல் ட்விட்டரில் சாத்தியமாகியுள்ளது.

கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக திரையுலகில் விஜய் களமிறங்குவார் என யூகங்கள் வருகின்றன. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்வி கமலிடம் கேட்கப்பட்ட போது, “எனது அனைத்துத் தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“சார் போன வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்க சொன்னது ‘ஒரு முகத்து மேல இன்னொரு முகத்தை போஸ்டரா ஒட்ட முடியாது’, ஆனா உங்களை பாரதியாரா சித்திரிக்கப்பட்ட புகைப்படத்தை உங்கள் ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் பிக்சரா வச்சிருக்கீங்க. இதற்கு பிரத்யேக காரணம் ஏதும் உண்டா?” என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு லாகவமாகப் பதிலளித்த கமல், “எனது தகப்பன் முகத்தை என் முகத்தில் பொருத்திப் பார்ப்பதில் தவறில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் இரு பிரதான கட்சிகள் 65 சதவிகித வாக்கு வங்கியை வைத்துள்ளன. தற்போது அவற்றில் சில குறையலாம். உங்களுக்கு 20 சதவிகிதம், ரஜினிக்கு 20 முதல் 25 சதவிகிதம் கிடைக்கும் பட்சத்தில் இருவரும் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தருமா?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த கமல், “கூட்டணி பின்னால் அமையலாம்; இப்போது அல்ல. கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றி பின் உள் சண்டைகள் போடுவது மக்களுக்கு நன்மை பயக்காது” என்று கூறியுள்ளார்.

“நீங்கள் படித்த நூலில் உங்களுக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது?” என்ற கேள்விக்கு, “நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், ‘பூணூல்’ அதனாலேயே அதைத் தவிர்த்தேன்” என்று பதிலளித்துள்ளார்.

சாதி ஒழிப்பு குறித்த கேள்விக்கு, “எனது மகள்கள் இருவரது பள்ளிச் சேர்க்கையின் போதும் சாதி, மதம் ஆகிய இரண்டையும் குறிப்பிடவில்லை. இந்த வழியாகத்தான் சாதி அடுத்த தலைமுறைக்குப் பரவுகிறது. ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். கேரளா இதை நடைமுறைப்படுத்துகிறது” என்று பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் கொட்டப்படும் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் பற்றி கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பாக கேரள முதல்வரிடம் வலியுறுத்தியதாகவும் இந்தப் பிரச்சினைக்கு இருதரப்பும் சேர்ந்து முடிவுகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ட்விட்டரில் அதிகமாகப் பேசப்படும் பிரபலங்கள் பட்டியலில் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள கமல் ட்விட்டரிலேயே பெரிய விவாதத்தை நடத்திமுடித்துள்ளார்.

No comments

Powered by Blogger.